நேர்காணல் நடுவே எழுந்து சென்ற பெண் அதிகாரி ; பாகிஸ்தானில் பரவும் வைரல் வீடியோ
பாகிஸ்தானில் பெண் காவல்துறை அதிகாரி ஒருவர், நேர்காணலின் போது திடீரென எழுந்து சென்று ஒரு கொலை வழக்கைக் கையாண்டுவிட்டு மீண்டும் நேர்காணலில் கலந்து கொண்ட காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவி வருகிறது.
ஆனால், இணையவாசிகளில் சிலர் “இது ஒரு நாடகம்” என்று அவரை விமர்சிக்கின்றனர்.எனினும் அவரது குறித்த இந்த செயலுக்கு பலர் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.

நேர்காணலின் நடுவே அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது."எனக்கு ஒரு அழைப்பு வருகிறது, இது காவல் நிலையப் பொறுப்பு அதிகாரியிடமிருந்து வரும் அழைப்பு" என்று கூறிவிட்டுப் பேசுகிறார்.
"சொல்லுங்கள் குர்ரம்... எங்கே? ஆள் பிடிபட்டுவிட்டானா? மிக நன்று. இதோ நான் வருகிறேன்," என்று கூறிவிட்டு, நேர்காணல் நடத்துபவரிடம், "ஒரு கொலை நடந்துவிட்டது, நான் இப்போதே போய் அதைக் கவனித்துவிட்டு வந்துவிடுகிறேன்" என்று கூறிவிட்டு செல்கிறார்.
சரியாக ஒரு மணி நேரம் கழித்து இந்த அதிகாரி மீண்டும் நேர்காணலுக்குத் திரும்புகிறார். அவரிடம் அவசரநிலை குறித்துக் கேட்டபோது, பணப் பிரச்சினை காரணமாக ஒரு நண்பன் தனது நண்பனைத் திட்டமிட்டு கொலை செய்துள்ளதாகக் கூறுகிறார்.
மேலும், பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் அளித்த தகவலின்படி, குற்றவாளியைக் கைது செய்ததாக அந்த அதிகாரி கூறினார்.