பிரிட்டன் அரண்மனை விழாவில் மன்னர் கண் முன்னே நடந்த துயரம்!
பிரிட்டன் அரண்மனை விழாவில் குதிரையிலிருந்து தவறி விழுந்து பெண் ராணுவ வீரர் பலியான சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் அரச குடும்பத்தினர் முன்னிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை பெர்க்ஷயரில் இந்த குதிரையேற்றக் காட்சி நடைபெற்றது.

சிறு வயது முதலே குதிரையேற்றத்தில் மிகுந்த ஆர்வம்
இதில் மன்னரின் சிறப்பு பாதுகாப்புப் படையான ‘தி கிங்ஸ் ட்ரூப் ராயல் ஹார்ஸ் ஆர்ட்டிலரி’ (The King’s Troop Royal Horse Artillery) பிரிவைச் சேர்ந்த லான்ஸ் பாம்பார்டியர் சியாரா சுல்லிவன் (Ciara Sullivan) என்ற 24 வயது வீராங்கனை பங்கேற்றார்.
தனது சாகசக் காட்சியை முடித்துவிட்டு மைதானத்தை விட்டு வெளியேறியபோது, எதிர்பாராதவிதமாகக் குதிரையிலிருந்து கீழே தூக்கி வீசப்பட்டார்.
அங்கிருந்த அவசரக் கால மருத்துவக் குழுவினர் மற்றும் மருத்துவர்கள் சியாராவிற்கு அதிதீவிர முதலுதவி சிகிச்சைகளை அளித்தனர். இருப்பினும், தலையிலும் உடலிலும் ஏற்பட்ட கடுமையான உள் காயங்கள் காரணமாக அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தேம்ஸ் வேலி போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த விபத்து நடந்த சமயத்தில் மன்னர் சார்லஸ் அதே அரங்கில் இருந்தபோதிலும், நிகழ்வின் தீவிரத்தன்மை அவருக்குப் பின்னரே தெரிவிக்கப்பட்டது. சியாராவின் மரணச் செய்தியைக் கேட்டு மன்னர் பெரும் அதிர்ச்சியும் ஆழ்ந்த துயரமும் அடைந்துள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
மரணமடைந்த சியாரா சுல்லிவன் ராணுவ வட்டாரத்தில் ‘சல்லி’ (Sully) என்று அன்போடு அழைக்கப்பட்டவர்.
சிறு வயது முதலே குதிரையேற்றத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட அவர், 2022-ஆம் ஆண்டு மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் அரசு இறுதிச்சடங்கு மற்றும் 2023-ஆம் ஆண்டு மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழா உள்ளிட்ட முக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க அரச நிகழ்வுகளில் குதிரைப்படை அணிவகுப்பில் பங்கேற்றுள்ளார்.
“அவள் தனக்கு மிகவும் பிடித்தமான, தான் உளமாற நேசித்த ஒரு வேலையைச் செய்யும்போதுதான் உயிர் நீத்துள்ளார்; அவர் எங்களது இதயங்களில் என்றும் வாழ்வார்” என்று சியாராவின் பெற்றோர் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இந்தத் துயரமான சம்பவத்தைத் தொடர்ந்து, ராயல் வின்ட்சர் குதிரை நிகழ்ச்சியிலிருந்து கிங்ஸ் ட்ரூப் பிரிவின் எஞ்சிய காட்சிகள் அனைத்தும் உடனடியாக ரத்து செய்யப்பட்டன. இந்த விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது குறித்துப் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் விபத்து விசாரணைப் பிரிவு அதிகாரிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
திறமைமிக்க இளம் வீராங்கனையின் அகால மரணம் பிரிட்டன் ராணுவத்தினர் மற்றும் குதிரையேற்ற விளையாட்டு ஆர்வலர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.