வாகன நிறுத்தமிடம் தொடர்பான தகராறில் பெண் மீது மற்றொரு பெண் கத்திக்குத்து
கனடாவின் ஒன்ராறியோ மாகாணம், ஒஷாவா பகுதியில் வாகனத்தை நிறுத்தும் இடம் தொடர்பாக ஏற்பட்ட மோதல் கத்திக்குத்தில் முடிவடைந்துள்ளதுடன், இதில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
நேற்றைய தினம் மாலை 5 மணியளவில் 'லேக்வியூ பார்க் அவென்யூ' மற்றும் 'சிம்கோ ஸ்ட்ரீட் சவுத்' ஆகிய வீதிகள் சந்திக்கும் பகுதிக்கு அருகில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வாகனத்தை நிறுத்தும் இடம் தொடர்பாக 53 வயதுடைய பெண் ஒருவருக்கும், அங்கு வந்த மற்றுமொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் அது கைகலப்பாக மாறியுள்ளது. இவ்விவாதத்தின் போது, 53 வயதுடைய பெண் திடீரென கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளார்.

இதனால் தற்காப்புக்காக அந்த ஆணும் பெண்ணும் சேர்ந்து, கத்தியை வைத்திருந்த பெண்ணின் முகத்தில் நாய்களை விரட்டப் பயன்படுத்தும் 'டாக் ஸ்ப்ரே' எனப்படும் ஒருவகை காரசாரமான திரவத்தைத் தெளித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த 53 வயதுடைய பெண், எதிரிலிருந்த பெண்ணை நோக்கிப் பாய்ந்து கத்தியால் பலமுறை குத்தியுள்ளார்.
கத்திக்குத்துத் தாக்குதலை நடத்திய பின்னர் சந்தேக நபரான பெண் அவ்விடத்திலிருந்து தப்பியோடியுள்ளார்.
எனினும், தீவிர விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் புலனாய்வாளர்கள், பின்னர் அவரைத் தேடிக் கண்டுபிடித்துக் கைது செய்து காவலில் எடுத்துள்ளனர்.
கத்திக்குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்த பெண், உடனடியாக மீட்கப்பட்டு ரொறன்ரோ பகுதியில் உள்ள அவசர விபத்துப் பிரிவு சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் படுகாயமடைந்த போதிலும், தற்போது அவரது நிலைமை சீராக உள்ளதாகப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.