கனடா–அமெரிக்க எல்லையில் வாகனப் பயணங்களில் வீழ்ச்சி
கிழக்கு ஒன்டாரியோவிலிருந்து நியூயார்க் மாநிலத்திற்கான கனடா–அமெரிக்க எல்லை கடக்கும் வாகனப் பயணங்களில் தொடர்ந்து 12வது மாதமாக வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
கடந்த ஜனவரியில் மட்டும் சுமார் 18,000 பயணங்கள் குறைந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அலெக்ஸாண்ட்ரியா பே,ஒக்டன்ஸ்பர்க் மற்றும் மசெனா எல்லைச் சாவடிகளில் ஜனவரியில் மொத்தம் 111,000 வாகனங்கள் பதிவாகியுள்ளன.

இது 2025 ஜனவரியில் இருந்த 129,000 மற்றும் 2024 ஜனவரியில் இருந்த 126,000 பயணங்களுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க குறைவாகும். கிழக்கு ஒன்டாரியோவை இணைக்கும் மேற்கு நியூயார்க் மாநில எல்லைச் சாவடிகளில் 2025 பிப்ரவரி முதல் வீழ்ச்சி தொடர்கிறது.
• டிசம்பரில்: 22,000 பயணங்கள் குறைவு • நவம்பரில்: 28,000 பயணங்கள் குறைவு • அக்டோபரில்: 27,000 பயணங்கள் குறைவு
அலெக்ஸாண்ட்ரியா பே (நியூயார்க்) மற்றும் லான்ஸ்டவுன் (ஒன்டாரியோ) நகரங்களை இணைக்கும் தவுசன்ட் ஹைலன்ட்ஸ் பிரிட்ஜில் பாலத்தில் மிகப்பெரிய வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அலெக்ஸாண்ட்ரியா பே எல்லைச் சாவடியில் ஜனவரியில் 33,500 வாகனங்கள் மட்டுமே பதிவாகியுள்ளன.
இது 2025 ஜனவரியில் இருந்த 43,300 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் பெரிய சரிவாகும். டிசம்பரில் மட்டும் லான்ஸ்டவுனிலிருந்து அலெக்ஸாண்ட்ரியா பே நோக்கி 12,000க்கும் மேற்பட்ட பயணங்கள் குறைந்துள்ளன.
ஒன்டாரியோவின் பிரெஸ்காட் நகரத்தையும் நியூயார்க் மாநில ஒக்டன்ஸ்பர்க் நகரத்தையும் இணைக்கும் Ogdensburg-Prescott International Bridge பாலத்தில் ஜனவரியில் 14,300 வாகனங்கள் பதிவாகியுள்ளன.
இது 2025 ஜனவரியில் இருந்த 19,500 பயணங்களிலிருந்து குறைந்ததாகும். 2025 பிப்ரவரி முதல் ஒவ்வொரு மாதமும் பயணங்கள் குறைந்து வருகின்றன. இதற்கு கனடா–அமெரிக்க வரிவிதிப்பு (tariff) போரும், கனடிய டொலரின் மதிப்பு குறைவும் முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன.