கனடாவில் ஆன்லைன் கிரிப்டோகரன்சி முதலீட்டு மோசடி
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள பேரி நகரில் 78 வயது முதியவர் ஒருவர், ஆன்லைன் கிரிப்டோகரன்சி முதலீட்டு மோசடியில் சிக்கி சுமார் 2,00,000 கனடிய டொலர்கள் பணத்தை இழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் வெளியிட்டுள்ள தகவலின்படி, 2025 பிப்ரவரியில் சமூக ஊடகம் மூலமாக அறிமுகமான நபர் ஒருவர், இந்த முதியவருடன் ஆன்லைன் மூலம் தொடர்பை ஏற்படுத்தியுள்ளார்.
பல மாதங்களாகத் தொடர்ந்து உரையாடி வந்ததால், நேரில் ஒருமுறை கூடச் சந்திக்காத நிலையிலும், அந்த நபருடன் தனக்கு ஒரு "உண்மையான பிணைப்பு" இருப்பதாக அந்த முதியவர் நம்பியுள்ளார்.
இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மோசடிக்காரர், முதியவரைக் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யுமாறு வற்புறுத்தி, அவரது வங்கிச் சேமிப்புக் கணக்குகளை அணுகும் அனுமதியைப் பெற்றுள்ளார்.
அதன்பின்னர், முதியவரின் கணக்கிலிருந்து பலமுறை கணிசமான தொகையைத் தனது கட்டுப்பாட்டில் உள்ள கிரிப்டோகரன்சி கணக்குகளுக்கு அவர் மாற்றியுள்ளார்.
இந்த நடவடிக்கை அனைத்தும் தனது நன்மைக்காகவே செய்யப்படுகிறது என முதியவர் தவறாகக் கருதியதால், பணப் பரிவர்த்தனைகளைத் தடுக்கவில்லை. இந்த ஆன்லைன் மோசடியில் முதியவர் மொத்தம் 2,00,000 டொலர் இழந்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
எனினும், பேரி பொலிஸாரும் முதியவரின் வங்கியும் இணைந்து உடனடியாகச் செயல்பட்டதன் விளைவாக, இழந்த தொகையில் சுமார் 135,000 டொலர் தொகையை மீட்டெடுக்க முடிந்தது. திருடப்பட்ட பணத்தின் பெரும்பகுதி கனடாவிற்கு வெளியே உள்ள வெளிநாட்டுக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளதால், மீதித் தொகையை மீட்பது மிகவும் சவாலானது எனப் பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இத்தகைய மோசடிகளில் சிக்காமல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பேரி பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். முதலீட்டு மோசடிக்காரர்கள் மக்களின் நம்பிக்கையைப் பெறக் காதல் வலை, சமூக ஊடகங்கள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் பிரபலங்களின் போலியான விளம்பரப் பரிந்துரைகளைப் பயன்படுத்துகின்றனர்.
மக்களின் தனிமை மற்றும் பலவீனங்களை இலக்காக்கும் மோசடிக்காரர்கள், "முடிவில்லாத பொய்யான வாக்குறுதிகளைத்" தந்து தொடர்ந்து தொடர்பில் இருப்பார்கள்.
ஏதேனும் ஒரு முதலீட்டு வாய்ப்பு "நம்ப முடியாத அளவிற்கு மிகச் சிறந்ததாகவோ அல்லது அதிக லாபம் தருவதாகவோத் தோன்றினால்" அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம். "உடனடியாக 5 நிமிடங்கள் ஒதுக்கி, உங்களது முடிவை இருவரிடமாவது பகிர்ந்துகொண்டு ஆலோசித்த பிறகே" அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனப் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.