ரூபிக் கியூப் விளையாட்டில் அசத்தி கின்னஸ் சாதனை படைத்த கனடியர்
கனடாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், 'போகோ ஸ்டிக்' உருளையில் கைகளைப் பயன்படுத்தாமல் துள்ளிக் குதித்தபடியே, மிக அதிக எண்ணிக்கையிலான ரூபிக் கியூப்களுக்குத் தீர்வு கண்டு புதிய உலகக் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
கனடாவின் நோவா ஸ்கோஷியாவில் உள்ள அனாபோலிஸ் ராயல் நகரைச் சேர்ந்தவர் சவுல் ஹாஃப்டிங். தற்போது ஹாலிஃபாக்ஸில் உள்ள டல்ஹவுசி பல்கலைக்கழகத்தில் பயின்று வருகின்றார்.
சவுல் வித்தியாசமான சாதனையைத் தன் வசமாக்கியுள்ளார். கடந்த 2021 அக்டோபர் 9 அன்று நடைபெற்ற இச்சாதனை நிகழ்வில், சவுல் போகோ ஸ்டிக்கில் கைகளைப் பயன்படுத்தாமல் துள்ளிக் கொண்டே தொடர்ச்சியாக 211 ரூபிக் கியூப்களைச் வெற்றிகரமாகத் தீர்த்து வைத்தார்.

இவர் குதித்துக் கொண்டே இருக்கும்போது, உதவியாளர்கள் தொடர்ச்சியாகக் கலைக்கப்பட்ட புதிய ரூபிக் கியூப்களை இவரிடம் எடுத்துக்கொடுத்து இச்சாதனைக்குப் பக்கபலமாக இருந்துள்ளனர்.
சிறுவயதில் இருந்தே கின்னஸ் புத்தகங்களைப் படித்து வளர்ந்தவன் நான். அந்தப் புத்தகத்தில் இடம்பெறும் அளவுக்கு எனக்குள் ஏதேனும் தனித்திறமை இருக்கும் என்று நான் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. ஆறாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே (11 அல்லது 12 வயதில்) ரூபிக் கியூப்களை வேகமாகக் கலைத்துத் தீர்ப்பதில் தீவிர ஆர்வம் காட்டி வந்தேன். கியூப் சார்ந்த பல சாதனைகள் கின்னஸ் புத்தகத்தில் இருப்பதை அறிந்ததும், ரூபிக் கியூப் தீர்ப்பதை போகோ ஸ்டிக்கில் குதிப்பதோடு இணைத்துச் செய்யப் பழகினேன். அதுவே என்னை இன்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறச் செய்துள்ளது என தெரிவித்துள்ளார்.
சாதாரண மனிதர்களுக்குத் தரையில் நின்றபடியே ரூபிக் கியூப்பைத் தீர்ப்பதே கடினமான ஒன்று. இதில் போகோ ஸ்டிக்கில் குதித்துக் கொண்டே செய்வதும், கைகளைப் பயன்படுத்தாமல் போகோ ஸ்டிக்கைக் கட்டுப்பாட்டில் வைப்பதும் சாத்தியமற்ற ஒன்றாகத் தோன்றலாம்.
இது குறித்து விளக்கிய சவுல், "பயிற்சியின் போது ஓரிரு முறை கீழே விழுந்திருக்கிறேன், ஆனால் நீங்கள் நினைப்பதை விடக் குறைவாகவே விழுந்தேன். கைகளைப் பயன்படுத்தாமல், முழங்கால்களால் மட்டுமே போகோ ஸ்டிக்கைப் பிடித்துக்கொண்டு சமநிலையைப் பேணுவதுதான் இதில் மிகவும் கடினமான பகுதியாகும்" என்று தெரிவித்தார்.