போலி லேசர் முடி அகற்றும் கருவிகள்: கனடா சுகாதாரத் துறை எச்சரிக்கை
கனடாவில் உள்ள சில அழகு சிகிச்சை மையங்களில் பயன்படுத்தப்படும் போலியான லேசர் முடி அகற்றும் கருவிகள் "கடுமையான உடல்நலக் கேடுகளை விளைவிக்கக்கூடும்" என கனடாவின் சுகாதாரத் துறையான 'ஹெல்த் கனடா' எச்சரிக்கை விடுத்துள்ளது.
சந்தையில் 'சோப்ரானோ' என்ற புகழ்பெற்ற பிராண்ட் பெயரில் விற்கப்படும் டயோட் லேசர் முடி அகற்றும் கருவிகள் மற்றும் டயோட் லேசர் சிகிச்சை முறைகள் அங்கீகரிக்கப்படாத போலிப் பொருட்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
• அசல் தயாரிப்பாளர்: 'அல்மா லேசர்ஸ் லிமிடெட்' (Alma Lasers Ltd.).
• போலி தயாரிப்பாளர் லேபிள்: 'பெய்ஜிங் பெர்ஃபெக்ட்லேசர் டெக்னாலஜி கோ., லிமிடெட்' (Beijing Perfectlaser Technology Co., Ltd.).

கனடா முழுவதும் உள்ள சிகிச்சை நிலையங்களில் இத்தகைய போலி சாதனங்கள் விளம்பரப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
'பெய்ஜிங் பெர்ஃபெக்ட்லேசர்' நிறுவனம் போலி மருத்துவச் சான்றிதழ்களைக் காட்டி, தங்களது பொருட்கள் அங்கீகரிக்கப்பட்டவை என வாங்குபவர்களை நம்பவைத்து ஏமாற்றியுள்ளது. கனடாவில் போலி மருத்துவ உபகரணங்களை விற்பனை செய்வது சட்டவிரோதமானது.
இத்தகைய போலிச் சாதனங்களின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்து எவ்வித உத்தரவாதமும் இல்லாததால், இவற்றைப் பயன்படுத்துவது தீவிர ஆரோக்கியப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என ஹெல்த் கனடா எச்சரித்துள்ளது.
சோப்ரானோ' பிராண்ட் லேசர் கருவிகளை வைத்திருக்கும் அல்லது வாங்க திட்டமிட்டுள்ள கிளினிக்குகள், சாதனத்தில் உள்ள நிரந்தர லேபிளைச் சரிபார்க்க வேண்டும்.
லேபிளில் உள்ள தயாரிப்பாளர் பெயர், சாதனத்தின் பெயர் மற்றும் மாடல் எண் ஆகியவற்றை ஹெல்த் கனடாவின் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ சாதனங்களின் பட்டியலுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
போலி சாதனம் என்பது கண்டறியப்பட்டால், உடனடியாக அதன் பயன்பாட்டை நிறுத்திப் பாதுகாப்பான முறையில் அகற்ற வேண்டும். சந்தேகம் இருந்தால் அசல் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
லேசர் சிகிச்சை பெற்ற பிறகு உடனடி வலி, தோலில் சிவத்தல் அல்லது வீக்கம் போன்ற பக்கவிளைவுகள் அல்லது உடல்நலப் பிரச்சினைகளை உணர்ந்தால், உடனடியாக அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரை அணுக வேண்டும். மேலும், இது தொடர்பான முறைப்பாடுகளை ஹெல்த் கனடாவிடம் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.