பிரிட்டனில் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துள்ளான போர் விமானம்! பாரிய சத்தத்துடன் வெடிப்பு
பிரிட்டனின் ராயல் ஏர் ஃபோர்ஸ் (RAF) படைத் தளத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கோர விபத்துக்குள்ளான £16 மில்லியன் மதிப்புள்ள போர் விமானத்தின் வால் பகுதி (Tail Section), பொதுமக்கள் தங்கியிருந்த பிரபல சுற்றுலா கேரவன் குடியிருப்புக்கு (Holiday Caravan Park) மிக அருகில் விழுந்து நொறுங்கியுள்ளது.
பிரிட்டனில் வழக்கமான பயிற்சிப் பறத்தலின் போது தொழில்நுட்பக் கோளாறால் நிலைதடுமாறிய அந்த அதிநவீன போர் விமானம், திறந்தவெளி மைதானத்தில் விழுந்து மிகப்பெரிய வெடிப்புச் சத்தத்துடன் தீப்பிழம்பாக மாறியது.

சிதறிய விமானத்தின் பாகங்கள்
விமானம் தரையில் மோதிய அதிர்வில் அதன் பாகங்கள் சிதறி , பிரதான வால் பகுதி அருகில் இருந்த விடுமுறைக்கால கேரவன் பூங்காவின் முன்பகுதியில் பலத்த சத்தத்துடன் விழுந்தது.
விபத்து நேரிட்ட போது தனது கேரவனுக்கு வெளியே நின்றிருந்த பூங்காவின் உரிமையாளர் மற்றும் சுற்றுலாப் பயணிகள், சில மீட்டர்கள் இடைவெளியில் விமானத்தின் வால் பகுதி விழுந்ததைக் கண்டு அலறியடித்து ஓடியுள்ளனர்
“மிகப் பெரிய தீப்பந்தம் போல் விமானம் கீழே விழுந்தது, நல்லவேளையாகக் கேரவன் மீது நேரடியாக விழாததால் மிகப்பெரிய உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது” எனச் சம்பவத்தைப் நேரில் பார்த்த பூங்கா உரிமையாளர் அச்சத்துடன் கூறியுள்ளார்.
அதேசமயம் விமானம் வெடித்துச் சிதறுவதற்குச் சில வினாடிகளுக்கு முன்பாக, அதில் இருந்த ஆபரேஷனல் விமானி அவசரகால ‘இஜெக்ஷன் சீட்’ (Ejection Seat) மூலம் பாராசூட்டில் குதித்துத் தப்பினார்.
காயங்களுடன் மீட்கப்பட்ட அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், ராயல் ஏர் ஃபோர்ஸ் அதிகாரிகளும் தீயணைப்புப் படையினரும் சம்பவ இடத்தை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விபத்து குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.