சீனாவில் துணி தொழிற்சாலையில் தீ விபத்து ; 8 பேர் பலி
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள துணி தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்.
குவாங்டாங் மாகாணத்தின் ஷன்டே மாவட்டம், ஆடை மற்றும் துணி உற்பத்திக்கான முக்கிய தொழில் மையமாக விளங்கி வருகிறது.
இப்பகுதியில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள், கூட்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

இந்த நிலையில், குவாங்சவ் நகரிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஷன்டே மாவட்டத்தில் செயல்பட்டு வந்த துணி தொழிற்சாலையொன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ வேகமாக பரவியதைத் தொடர்ந்து, தொழிற்சாலையில் பணியாற்றிய தொழிலாளர்கள் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். எனினும், தீ விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.