நடுவானில் ஏற்பட்ட தீப்பரவல் ; கே.எல்.எம் விமானம் அவசரமாக தரையிறக்கம்
நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து கரீபியன் தீவான குராசாவோ நோக்கிப் புறப்பட்ட கே.எல்.எம். விமானத்தில் பயணியொருவரின் கையடக்க மின்னேற்றி (Power Bank) நடுவானில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை (செப்டெம்பர் 17) அட்லாண்டிக் பெருங்கடலுக்கு மேலாக விமானம் பறந்துகொண்டிருந்தபோது, வணிக வகுப்புப் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கையடக்க மின்னேற்றி தீப்பிடித்ததைத் தொடர்ந்து விமானப் பணியாளர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
இதனால் பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என டச்சு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எனினும், நிலைமையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு விமானி, விமானத்தை குராசாவோ நோக்கிய பயணத்தைத் தொடராமல் மீண்டும் ஆம்ஸ்டர்டாமை நோக்கித் திருப்பியுள்ளார்.
ஆம்ஸ்டர்டாமில் இருந்து புறப்பட்ட சுமார் 5 மணி 30 நிமிடங்களுக்குப் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மொத்தமாக சுமார் 11 மணி நேரம் வானில் பயணித்த விமானம், குராசாவோவை சென்றடையாமல் இரவு 8.40 மணியளவில் மீண்டும் ஆம்ஸ்டர்டாமின் ஸ்கிபோல் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
இதனிடையே, தீப்பிடித்த கையடக்க மின்னேற்றி கே.எல்.எம். நிறுவனத்தின் முன்னாள் முதன்மைச் செயல் அதிகாரி கமியல் யூர்லிங்ஸுக்குச் சொந்தமானதாக இருக்கலாம் என சில டச்சு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எனினும், இதுகுறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்தச் சம்பவம் விமானப் பயணங்களின்போது லித்தியம்-அயன் மின்கலங்களைக் கொண்ட சாதனங்களை எடுத்துச் செல்வது தொடர்பான பாதுகாப்பு விதிகளை மீண்டும் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளது.

கே.எல்.எம். நிறுவனத்தின் விதிகளின்படி, ஒரு பயணி அதிகபட்சம் இரண்டு கையடக்க மின்னேற்றிகளை எடுத்துச் செல்ல முடியும். அவற்றை பதிவு செய்யப்பட்ட பயணப் பொதிகளில் வைக்கக் கூடாது; கைப்பையில் மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும்.
மேலும், விமானப் பயணத்தின்போது கையடக்க மின்னேற்றிகளைப் பயன்படுத்துவதற்கும் அல்லது அவற்றின் மூலம் சாதனங்களை மின்னேற்றுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகள் பயணத்தின் தொடக்கத்திலேயே பயணிகளுக்கு அறிவிக்கப்படுவதாகவும், விதிமுறைகளை மீறுபவர்களுக்கு தற்போதைய நிலையில் அபராதம் விதிக்கும் நடைமுறை இல்லை என்றும் கே.எல்.எம். தெரிவித்துள்ளது.
கையடக்க மின்னேற்றிகளில் பயன்படுத்தப்படும் லித்தியம் மின்கலங்கள் சேதமடைந்தாலோ அல்லது அதிக வெப்பமடைந்தாலோ தீப்பற்றும் அபாயம் இருப்பதால், விமானப் பயணங்களில் அவற்றை முறையாகக் கையாள்வது முக்கியத்துவம் பெறுகிறது.