ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய்க் கப்பலில் தீப்பரவல் ; டுபாய் கடற்பகுதியிலும் மர்ம வெடிப்பு
ஹோர்முஸ் நீரிணையில் தடைசெய்யப்பட்ட வலயத்தில் கடற்படை கண்ணிவெடியில் மோதிய எண்ணெய்க் கப்பல் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக ஈரானிய இராணுவம் தெரிவித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் நகருக்கு மேற்கே சுமார் 50 கடல் மைல் தொலைவில் பயணித்துக்கொண்டிருந்த மற்றுமொரு கப்பலுக்கு அருகில் அடையாளம் தெரியாத எறிபொருளொன்று வெடித்துள்ளதாக ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக நடவடிக்கை அமைப்பு (UKMTO) தெரிவித்துள்ளது.

குறித்த வெடிப்புச் சம்பவம் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள UKMTO, கப்பலுக்கு அருகில் அடையாளம் தெரியாத எறிபொருளொன்று வெடித்ததாகக் குறிப்பிட்டுள்ளது.
எனினும், இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்பதுடன், கப்பலுக்கும் எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை மற்றும் அதனை அண்மித்த கடற்பகுதிகளில் இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவங்கள், சர்வதேச கடல்சார் போக்குவரத்தின் பாதுகாப்பு தொடர்பில் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளன.
எவ்வாறாயினும், எண்ணெய்க் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலின் பாதிப்புகள் மற்றும் சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.