சுவிஸ் விமானத்தில் திடீரென பற்றிய தீ ; பயணிகள் படுகாயம் ; இந்தியாவில் சம்பவம்
டில்லி விமான நிலையத்தில் இருந்து சூரிச் நோக்கி புறப்பட்ட சுவிஸ் ஏர் விமானம் திடீரென தீப்பற்றி எரிந்ததால், அவசர அவசரமாக ஓடுதளத்தில் நிறுத்தப்பட்டு அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இதில், 6 பயணிகள் படுகாயமடைந்தனர்.

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று (ஏப்ரல் 25) , 232 பயணிகள் மற்றும் 13 ஊழியர்களுடன் சுவிஸ் ஏர் விமானம், சுவிட்சர்லாந்தின் சூரிச் நகருக்கு புறப்பட்டது.
விமானம் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த போது, ஒரு இன்ஜின் பழுதானதை விமானி உணர்ந்தார்.
விமானத்தின் இடதுபுறத்தில் புகை வெளியேறுவதையும் கண்டு, உடனடியாக ஓடுபாதையிலேயே விமானத்தை நிறுத்தினார்.
உடனடியாக பயணிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் அவசரகால சறுக்குப்பாதைகள் வழியாக ஓடுதளத்திலேயே பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இருப்பினும், 6 பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். விமானிகள் சாமர்த்தியமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து டெல்லி விமான நிலையத்தின் ஓடுதளம் 28 நீண்ட நேரத்திற்குத் தற்காலிகமாக முடக்கப்பட்டது.