இந்தோனேசியாவில் தீயணைப்பு பணியின்போது நடு ஆற்றில் மூழ்கிய ஹெலிகாப்டர்
இந்தோனேசியாவின் போர்னியோ தீவில் உள்ள தெற்கு கலிமாந்தான் மாநிலத்தில், காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று பாரிட்டோ ஆற்றில் விழுந்து மூழ்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று நிகழ்ந்த இந்த கோர விபத்தில், ஹெலிகாப்டரில் இருந்த பணியாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நடுஆற்றில் நடந்த விபரீதம் காட்டுத்தீயை அணைப்பதற்காக பாரிட்டோ ஆற்றிலிருந்து பிரத்யேக வாளி மூலம் தண்ணீரை நிரப்பிக்கொண்டு ஹெலிகாப்டர் மேலே எழும்ப முயன்றது.
அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர், மெதுவாக கீழ்நோக்கி இழுக்கப்பட்டு நடுஆற்றில் மூழ்கியது.
இந்த விபத்தில் சிக்கிய ஆஸ்திரேலிய விமானிகள் இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி பாதுகாப்பாக உள்ளதாக தேசியப் பேரிடர் தணிப்பு அமைப்பு தெரிவித்தது.
இருப்பினும், அவர்களது தற்போதைய உடல்நிலை குறித்த கூடுதல் விவரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை. இதனிடையே, ஆற்றில் மூழ்கிய மற்றொரு பணியாளரை தேடும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டனர்.
தேடுதல் வேட்டையின் முடிவில், உள்ளூர் நேரப்படி மாலை 6.08 மணியளவில் உயிரிழந்தவரின் உடல் மீட்கப்பட்டதாக மீட்பு அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.