நடுவானில் கர்ப்பிணிப்பெண்ணுக்கு பிரசவம் பார்த்த கனடா பெண் வைத்தியர்!
விமானமொன்றில் இரவோடு இரவாக குழந்தை ஒன்றை பிரசவிக்க உதவியது தமக்கு மகிழ்ச்சி அளித்ததாக கனடாவைச் சேர்ந்த வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கத்தாரில் இருந்து யுகாண்டாவுக்கு சென்ற விமானத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் கர்ப்பிணிப்பெண்ணுக்கு பயணம் செய்துகொண்டிருந்தார். இதேவேளை குறித்த விமானத்தில் கனடா நாட்டின் ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக பணியாற்றி வருவரும் டாக்டர் ஆயிஷா காதிப் பயணம் செய்துகொண்டிருந்தார்.
இதேவேளை குறித்த பெண்ணுக்கு விமானத்தில் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது பிரசவ வலி ஏற்பட்டது.
அப்போது விமானத்தில் வைத்தியர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்று பணிப்பெண் ஒருவர் விசாரித்துள்ளார். உடனே வைத்தியர் ஆயிஷா எந்த தயக்கமும் இன்றி, தன் இருக்கையில் இருந்து எழுந்து விமானத்தில் கூட்டமாக இருந்த இடத்துக்கு சென்றார்.
அவர் யாரேனும் மாரடைப்பு போன்ற ஆபத்தான நிலையில் தவித்துக்கொண்டிருக்கக்கூடும் என்று கருதினார். ஆனால் அங்கே பிரசவ வலியில் கர்ப்பிணிப்பெண் துடித்துக்கொண்டிருந்தார். அவருக்கு டாக்டர் ஆயிஷா பிரசவம் பார்த்தார்.
பிரசவத்தில் டாக்டர் ஆயிஷாவுக்கு அந்த விமானத்தில் பயணித்த நர்ஸ் ஒருவரும், குழந்தை நல மருத்துவர் ஒருவரும் உதவினர். அப்போது அந்த விமானம் நைல் நதிக்கு மேலே 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது.
இந்த பிரசவத்தில் கர்ப்பிணிப்பெண் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார். டாக்டர் ஆயிஷா அந்த பெண்ணுக்கு நல்லமுறையில் பிரசவம் பார்த்து, பெண் குழந்தை பிறந்தபோது அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்துள்ளனர்.
அந்த குழந்தைக்கு டாக்டர் ஆயிஷாவின் பெயரை ‘மிராக்கிள் ஆயிஷா’ என்று வைத்துள்ளனர். இதில் மகிழ்ந்து போன டாக்டர் ஆயிஷா, ஆயிஷா என்று பதிக்கப்பெற்றிருந்த தனது தங்க கழுத்தணியை (நெக்லஸ்) புதிதாக பிறந்த அந்த பெண் குழந்தைக்கு பரிசாக அளித்தார்.
இந்த ருசிகர சம்பவம் டிசம்பர் 5-ந்தேதி நடந்தது. ஆனால் டாக்டர் ஆயிஷா தனது பணியில் மிகவும் தீவிரமாக இருந்து நேரம் கிடைக்காமல் போனதால் இப்போதுதான் நடந்ததை வெளி உலகுக்கு சொல்லி இருக்கிறார். இது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.