அவுஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள நிலை: இரவோடு இரவாக மீட்கப்பட்ட மக்கள்!
அவுஸ்திரேலியாவின் வடக்கிழக்கு பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கிய 300க்கும் அதிகமான மக்கள் இரவோடு இரவாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
மீட்கப்பட்டவர்களில் பலர் வெள்ளத்தில் சிக்காமல் கட்டடங்களின் மேற்கூரைகளில் ஏறித் தப்பினர்.
மேலும், வெள்ளம் காரணமாக கெய்ர்ன்ஸ் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
சுமார் 1 லட்சத்து 60 பேர் வசிக்கும் இந்த நகரில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உருவாகியுள்ளது.
கெய்ர்ன்ஸ் நகரில் மழை குறைந்தபோதிலும் அருகிலுள்ள போர்ட் டக்ளஸ், டெயின்ட்ரீ, குக்டவுன், வுஜல்வுஜல் மற்றும் ஹோப் வேலி ஆகிய பகுதிகளுக்கு கனமழை மற்றும் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு (17-12-2023) மிகவும் மோசமானதாகவும் சவாலுக்குரியதாகவும் இருந்த என தெரிவித்துள்ள குயின்ஸ்லாந்து மாநில பொலிஸ் மா அதிபர் காதரினா கரோல், சுமார் 300-க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பகுதிகளை இரண்டு புயல்கள் கடந்துசென்றபோதிலும் பலத்த காற்று காரணமாக லேசான பாதிப்புகளே ஏற்பட்டுள்ளன.
இருப்பினும், கனமழை மற்றும் வெள்ளத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வீதிகள், ரயில் பாதைகளில் போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.
மேலும், பல குடியிருப்புப் பகுதிகள் தொலைத் தொடர்பு வசதிகளை இழந்தன. 14 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.