அல்பர்ட்டா மாகாணத்தில் வேகமாகப் பரவும் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல்
கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தில் வழமைக்கு மாறாக முன்னதாகவே ஆரம்பித்துள்ள இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதுடன், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்துள்ளது.
மாகாணத்தில் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நோய்த்தொற்றுகளில் அரைவாசிக்கும் மேற்பட்டவை கல்கரி நகரிலேயே பதிவாகியுள்ளன. செவ்வாய்க்கிழமை வரையிலான தரவுகளின்படி, இந்தப் பருவத்தில் அல்பர்ட்டா மாகாணத்தில் 6,610 பேருக்கு இன்ஃப்ளூயன்ஸா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் 1,592 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 121 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். அத்துடன், இதுவரை 58 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் கல்கரி வலயத்தில் மாத்திரம் 3,386 தொற்றாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், 823 பேர் வைத்தியசாலைகளிலும், 57 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கல்கரியில் மாத்திரம் 34 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
பதிவான தொற்றுகளில் பெரும்பாலானவை 'இன்ஃப்ளூயன்ஸா A' வகையைச் சேர்ந்தவை எனவும், 32 பேருக்கு மாத்திரமே 'இன்ஃப்ளூயன்ஸா B' தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழமையாக நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் ஆரம்பிக்கும் இன்ஃப்ளூயன்ஸா பருவம், இவ்வருடம் செப்டெம்பர் 27 ஆம் திகதியே ஆரம்பித்துவிட்டதாகச் சுகாதாரத் தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது, இவ்வருடம் 5,668 அதிகமான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதோடு, வைத்தியசாலை அனுமதிகளும் 277-லிருந்து 1,440 ஆக உயர்ந்துள்ளன.
'இன்ஃப்ளூயன்ஸா A' வைரஸின் H1N1 திரிபே இந்தத் தீவிரப் பரவலுக்கு முக்கியக் காரணமாகும். வைரஸ் பரவல் முன்கூட்டியே ஆரம்பித்தமையும், பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் காட்டும் குறைவான ஆர்வமுமே வைத்தியசாலை அனுமதிகள் அதிகரிக்கக் காரணம் என கல்கரி பல்கலைக்கழகத்தின் தொற்றுநோய் நிபுணர் பேராசிரியர் கிரேக் ஜென்னி சுட்டிக்காட்டியுள்ளார்.