சீனாவின் உயரிய இலக்கிய விருதை வென்ற உணவு டெலிவரி ஊழியர்
சீனாவைச் சேர்ந்த உணவு டெலிவரி ஊழியரும் கவிஞருமான வாங் ஜிபிங், தனது கவிதைத் தொகுப்புக்காக சீனாவின் மதிப்புமிக்க லு சூன் இலக்கியப் பரிசை வென்று சாதனை படைத்துள்ளார்.
நவீன சீன இலக்கியத்தின் தந்தை எனப் போற்றப்படும் லு சூனின் பெயரில் வழங்கப்படும் இந்த விருது, சீனாவின் மிக உயர்ந்த இலக்கிய அங்கீகாரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
வாங் ஜிபிங் எழுதிய ‘லோ பிளைட்’ (Low Flight) என்ற கவிதைத் தொகுப்பு, சீனாவில் பணிபுரியும் தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கை, போராட்டங்கள், விரக்திகள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை மையமாகக் கொண்டுள்ளது.

இந்த நூலை உருவாக்குவதற்காக அவர் சுமார் 200 சக டெலிவரி ஊழியர்களுடன் உரையாடி, அவர்களின் அனுபவங்களை கவிதைகளாக பதிவு செய்துள்ளார்.
பகல் நேரங்களில் உணவு டெலிவரி பணியில் ஈடுபடும் வாங் ஜிபிங், கடந்த 8 ஆண்டுகளில் தனது ஸ்கூட்டரில் சுமார் 1.5 இலட்சம் கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் பயணித்துள்ளார்.
அதே காலப்பகுதியில், ஓய்வு நேரங்களை பயன்படுத்தி 6,000-க்கும் மேற்பட்ட கவிதைகளையும் எழுதியுள்ளார். ஜியாங்சு மாகாணத்தைச் சேர்ந்த வாங் ஜிபிங், குடும்பத்தின் பொருளாதார நெருக்கடி காரணமாக இளம் வயதிலேயே பள்ளிப் படிப்பை நிறுத்தியுள்ளார்.
பின்னர் கட்டுமானத் தொழில், குப்பை சேகரிப்பு, தெருவோர வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு வேலைகளைச் செய்த அவர், இறுதியில் உணவு டெலிவரி ஊழியராக பணியாற்றத் தொடங்கினார்.
சாதாரண தொழிலாளர்களின் வாழ்க்கை அனுபவங்களை இலக்கியமாக மாற்றியுள்ள அவரது படைப்பு, சீனாவில் தொழிலாளர் வர்க்கத்தின் குரலுக்கு கிடைத்துள்ள முக்கிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.
வாழ்க்கையின் கடினமான பாதைகளைக் கடந்து, தனது உழைப்பாலும் எழுத்தாற்றலாலும் உயர்ந்த வாங் ஜிபிங்கின் வெற்றி, கனவுகளுக்கு எல்லைகள் இல்லை என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.