கட்டாரில் வெளிநாட்டு விமான சேவைகள் ஆரம்பம்
ஈரான் போர் சூழல் காரணமாக கடந்த பிப்ரவரி 28 முதல் கட்டார் வான்வெளி மூடப்பட்டிருந்தது.
இதனால் தோஹாவிற்கான சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ஹமாத் சர்வதேச விமான நிலையம் வழியாகச் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கட்டார் சிவில் ஏவியேஷன் ஆணையம் (QCAA) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான சேவைகள் உடனடியாக முழுமையாகத் தொடங்கப்படாமல், முதற்கட்டமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்ட பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச பாதுகாப்புத் தரநிலைகளின்படி அனைத்துப் பயணங்களும் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக ரத்து செய்யப்பட்ட பயணங்களால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மறுபதிவு (Rebooking) செய்வதில் முன்னுரிமை அளிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வான்வெளி திறக்கப்பட்டாலும், விமான அட்டவணைகள் மாற்றத்திற்கு உட்பட்டவை என்பதால் பயணிகள் தங்கள் விமான நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு நேரத்தை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளைப் பயன்படுத்துவது குறித்து அந்தந்த விமான நிறுவனங்களின் இணையதளங்களைச் சரிபார்க்குமாறு கோரப்பட்டுள்ளது.
ஈரான் போர் பதற்றம் காரணமாக இந்தப் பிராந்தியத்தின் முக்கிய விமானப் போக்குவரத்து மையங்கள் பாதிக்கப்பட்டிருந்தன.
கட்டாரைப் போலவே, இந்த மாத ஆரம்பத்தில் பஹ்ரைன் சர்வதேச விமான நிலையமும் தனது வான்வெளியைத் திறந்து படிப்படியாக விமான சேவைகளைத் ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.