சுவிட்சர்லாந்தில் அதிக அளவில் குற்றச்செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்கள்: ஆய்வு முடிவுகள்...
பொதுவாகவே வெளிநாட்டவர்கள் ஒரு நாட்டுக்குச் செல்லும்போது, அவர்களால் தங்கள் நாட்டுக்கு ஏதாவது நன்மை ஏற்படுமா என கவனிக்கும் நாடுகள், கூடவே அவர்களால் நம் நாட்டின் அமைதிக்கு ஏதாவது பங்கம் ஏற்படுமா என்பதையும் கவனிப்பார்கள்.
இது பெரும்பாலான நாடுகளில் நடைபெறும் ஒரு விடயம். அதனால்தான் சுற்றுலாப்பயணிகளை ஒருவிதமாகவும் புகலிடம் கோருபவர்களை வேறுவிதமாகவும் நடத்துகின்றன பல நாடுகள். கசப்பாக இருந்தாலும், இதுதான் நிதர்சனமான உண்மை.
அவ்வகையில், சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, சுவிட்சர்லாந்தில் வாழும் வெளிநாட்டவர்கள் எந்த அளவுக்குக் குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பது அரசியல்வாதிகளால் அடிக்கடி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் ஒரு விடயமாக காணப்படுகிறது, குறிப்பாக வலதுசாரி சுவிஸ் மக்கள் கட்சி (SVP) அரசியல்வாதிகளிடையே...
2021ஆம் ஆண்டு, இந்த SVP கட்சியினரின் ஒரு நடவடிக்கை காரணமாக, சுவிட்சர்லாந்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளவர்கள் எந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்ற விவரத்தை வெளியிடவேண்டிய ஒரு சூழ்நிலை சூரிச் போலிசாருக்கு ஏற்பட்டது.

அவர்களுடைய எதிர்பார்ப்பு நிறைவேறியது என்றே கூறலாம். காரணம், சமீபத்திய புள்ளிவிவரங்கள், சுவிட்சர்லாந்தில் நடைபெறும் பெரும்பாலான குற்றச்செயல்கள், பயங்கர வன்முறைக் குற்றங்கள் உட்பட, வெளிநாட்டவர்களாலேயே செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கின்றன.
2021ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், பெடரல் புள்ளியியல் அலுவலகம் (FSO) வெளியிட்ட தரவுகளின்படி, நிரந்தர வாழிட உரிமம் பெற்றவர்கள், புகலிடக்கோரிக்கையாளர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் உட்பட, வெளிநாட்டவர்கள்தான் சுவிஸ் குடிமக்களைவிட அதிக மற்றும் பயங்கர குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
2020ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ள 270 கொலை முயற்சி வழக்குகளில் 99, சுமார் 33 சதவிகிதம் மட்டுமே சுவிஸ் குடிமக்களால் மேற்கொள்ளப்பட்டவை, மற்றவை வெளிநாட்டவர்கள் செய்தவை!
அத்துடன், பயங்கரமாக காயம் ஏற்படுத்தும் அளவில் தாக்குதல் நடத்தப்பட்ட 712 குற்றச்செயல்களில் 317, அதாவது 45 சதவிகிதம் சுவிஸ் மக்களால் மேற்கொள்ளப்பட்டவை, மீதமுள்ள 55 சதவிகிதம் வெளிநாட்டவர்களால் செய்யப்பட்டவை.
இந்த இரண்டு பிரிவுகளிலுமே, சுவிஸ் மக்களை விட வெளிநாட்டவர்களே அதிக அளவில் குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள்.
வெளிநாட்டவர்கள் அதிக அளவில் பயங்கர வன்முறைக் குற்றங்களில் ஈடுபடுகிறார்கள், அதே நேரத்தில், சுவிஸ் குடிமக்கள் பயங்கர குற்றச்செயல்களில் ஈடுபடுவதில்லை என்றும் கூறிவிடமுடியாது என்கிறார், சூரிச் பல்கலையில் வன்முறை தொடர்பான ஆய்வு மேற்கொள்ளும் Dirk Baier.
அப்படி வெளிநாட்டவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கு அவர்கள் பெறும் குறைந்த வருவாய், கல்வி போன்ற விடயங்களும், காரணம் என்கிறார் அவர். கூடவே, குற்றச்செயல்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையைக் கணக்கிடும்போது, சுவிஸ் மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது வெளிநாட்டவார்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், அவர்களில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை, சதவிகிதத்தில் அதிகமாகத் தெரிவதையும் மறுப்பதற்கில்லை
அத்துடன், இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வும் கூறுகிறார் Baier.
புலம்பெயர்தல் பின்னணி கொண்ட பிள்ளைகளுக்கு சிறிய வயதிலேயே மொழி வகுப்புகள் முதலான கல்வி அளிப்பது, அவர்கள் எளிதில் சுவிட்சர்லாந்தைப் புரிந்துகொள்வதற்கும், மற்றவர்களுடன் தொடர்புகொள்வதற்கும் உதவும் என்றும், அப்படி அவர்கள் சமுதாயத்துடன் இணைந்து வாழும் நிலையில், அவர்கள் வன்முறையில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் கூறுகிறார் Baier.
 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        