கனடாவில் முன்னாள் பொலிஸ் அதிகாரி மீது சுமத்தப்பட்டுள்ள அதிர்ச்சி குற்றச்சாட்டு
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள டர்ஹாம் பிராந்தியத்தின் முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர், 20 வருடங்களுக்கு முன்பு 17 வயது சிறுமிக்கு எதிராக இழைத்த பாலியல் வன்கொடுமைகள் மற்றும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் அண்மையில் வழங்கிய "புதிய தகவல்களின்" அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஒன்டாரியோவின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு விசேட செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
முன்னாள் அதிகாரி கெவின் சீமன்ஸ் (Kevin Seamons) என்பவர் கடந்த 2003 ஆம் ஆண்டில் ஒரு பெண்ணுக்கு எதிராக பல குற்றவியல் குற்றங்களைச் செய்துள்ளார் என்று நம்புவதற்குக் தகுந்த காரணங்கள் இருப்பதாக அதன் இயக்குநர் ஜோசப் மர்டினோ தெரிவித்துள்ளார்.

2006 ஆம் ஆண்டு காவல்துறை சேவைகளுக்கான ஒன்டாரியோ சிவிலியன் கமிஷனின் ஆவணங்களின்படி, பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு அப்போது 17 வயது என்பது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 2003 இல் முதன்முதலில் விசாரணை நடத்தப்பட்டபோது, கான்ஸ்டபிள் சீமன்ஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவரது லாக்கர் சோதனையிடப்பட்டது.
அப்போது அவரது லாக்கரில் இருந்து ஒன்பது ஆபாசப் புகைப்படங்களும், மூன்று பொலிஸ் தடிகளும் (Batons) கண்டெடுக்கப்பட்டன. இதன் விளைவாக அவர் 2006 இல் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
அதன்பின்னர், இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டிருந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண் கடந்த 2024 ஆம் ஆண்டில் புதிய விபரங்களுடன் மீண்டும் புகார் அளித்ததை அடுத்து, இந்த பாலியல் வன்கொடுமை விசாரணை மீண்டும் தொடங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கெவின் சீமன்ஸுக்கு எதிராக கனடா தழுவிய பிடி விராந்து பிறப்பிக்கப்பட்டது.
அதனடிப்படையில், ஆல்பர்ட்டாவின் மோரின்வில் பகுதியில் வைத்து பொலிஸார் அவரை கைது செய்ததுடன், அவர் மீது மொத்தம் 22 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட முன்னாள் அதிகாரி, பாதிக்கப்பட்ட பெண்ணுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தவொரு தொடர்பையும் வைக்கக்கூடாது என்ற கடுமையான நிபந்தனைகளின் கீழ் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.