உக்ரைன்–ரஷியா மோதல் தீவிரம் ; ரஷியா–பெலாரஸ் கூட்டு அணு ஆயுதப் பயிற்சி
உக்ரைன் போர் நான்கு ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், ரஷ்யா தனது அண்டை நாடான பெலாரஸ் உடன் இணைந்து தரை, கடல் மற்றும் வான்வழியாக கூட்டு அணு ஆயுதப் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இந்த மூன்று நாட்கள் நீடிக்கும் பயிற்சி, உக்ரைன் அண்மையில் மாஸ்கோவுக்கு அருகிலுள்ள பகுதிகளில் நடத்திய ட்ரோன் தாக்குதல்களில் மூவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆக்கிரமிப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக அணு ஆயுதப் படைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கில் இந்தப் பயிற்சி நடத்தப்படுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

இதில் சுமார் 64,000 ராணுவ வீரர்கள், 200-க்கும் மேற்பட்ட ஏவுகணை ஏவுதளங்கள், 140 போர் விமானங்கள், 73 போர் கப்பல்கள் மற்றும் 13 நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளிட்டவை பங்கேற்றுள்ளன.
விளாடிமிர் புதின் தலைமையிலான 2024 திருத்தப்பட்ட அணு ஆயுதக் கொள்கையின்படி, அணு ஆயுதம் கொண்ட நாடு ஒன்றின் ஆதரவுடன் எந்த நாடும் தாக்குதல் நடத்தினால், அது கூட்டு தாக்குதலாக கருதப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் பெலாரஸும் ரஷ்யாவின் அணு பாதுகாப்பு கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு அதிநவீன ஏவுகணைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ரஷ்யாவின் அணு ஆயுதப் பயிற்சிகள் நடைபெற்று கொண்டிருக்கும் வேளையில், உக்ரைன் ஒரு முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை ட்ரோன் மூலம் தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஸெலென்ஸ்கி அந்த தாக்குதல் தொடர்பான படங்களை வெளியிட்டுள்ளார்.

உக்ரைன் எல்லையிலிருந்து சுமார் 800 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த எண்ணெய் நிலையத் தாக்குதலில் இருவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது மே மாதத்தில் மட்டும் உக்ரைன் குறிவைத்த 11வது ரஷிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய தாக்குதலாகும்.
இந்த தொடர் தாக்குதல்களால், ரஷ்யாவின் பல முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு மையங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நாட்டின் மொத்த சுத்திகரிப்பு திறனில் ஒரு பெரிய பகுதி முடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் குறிப்பிடுகின்றன.