மெக்சிகோவில் முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் சுட்டுக்கொலை
மெக்சிகோ நாட்டின் முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் கரோலினா புளோரஸ் கோம்ஸ், அவரது மாமியாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
2017-ஆம் ஆண்டு 'மிஸ் டீன் யுனிவர்ஸ்' (Miss Teen Universe) பட்டம் வென்ற 27 வயது கரோலினா. இந்நிலையில் கரோலினாவை, அவரது மாமியார் எரிகா மரியா ஏப்ரல் 15-ஆம் தேதி சுட்டுக்கொலை செய்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
குடும்பத் தகராறு, தனது மகன் மீது கரோலினா வைத்திருந்த அதீத அன்பு குறித்த பொறாமையே கொலைக்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தனது மகன் மீது கரோலினா வைத்திருந்த அதீத அன்பு
கொலை நடந்த அன்று கரோலினாவின் வீட்டின் பின்புறம் அவர் சென்றபோது, அவரைப் பின்தொடர்ந்து சென்ற எரிகா மரியா துப்பாக்கியால் ஆறு முறை சுட்டுள்ளார்.
"நீ எனக்கு மட்டுமே சொந்தமானவன்... இவள் உன்னை என்னிடமிருந்து பறித்துக்கொண்டாள்" என்று தனது மகனிடம் எரிகா ஆவேசமாகக் கத்தியதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
சம்பவம் நடந்த சில நிமிடங்களில் கரோலினாவின் கணவர் அலெஜாண்ட்ரோ தனது குழந்தையுடன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, கரோலினா ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இந்தக் கொடூரச் சம்பவத்தைத் தொடர்ந்து எரிகா மரியா தலைமறைவாகியுள்ளார். அவருக்கு எதிராகக் கொலை வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மெக்சிகோ போலிசார் அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் , குடும்பப் பகையினால் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு மெக்சிகோ முழுவதும் மக்கள் தன்னார்வப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.