சுற்றிவளைத்த படையினர்; ஹோண்டுராஸ் முன்னாள் அதிபர் அதிரடி கைது!
போதைபொருள் கடத்தல் வழக்கில் ஹோண்டுராஸ் முன்னாள் அதிபர் அதிரடியாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸ் இல் 2014 முதல் 2021 வரை ஹோண்டுராஸ் நாட்டின் அதிபராக ஜுவன் ஒர்லெண்டோ ஹெர்னெண்டிஸ் அல்வரடொ செயல்பட்டு வந்தார்.
ஹோண்டுராஸ் அதிபராக அல்வரடொ பதவி வகித்தபோது போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாகவும், போதைப்பொருள் கடத்தல், ஆயுத கடத்தலில் ஈடுபட்டதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனை தொடர்ந்து போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக முன்னாள் அதிபர் ஜூவன் மீது அமெரிக்காவில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், போதைபொருள் கடத்தல் வழக்கில் ஜூவனை கோர்ட்டில் நேரில் ஆஜர்படுத்த அமெரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.
இதனால், ஜூவனை அமெரிக்காவுக்கு நாடு கடத்த ஹோண்டுராஸ் அரசிடம் அமெரிக்கா கோரிக்கை விடுத்தது. இந்த நாடு கடத்தல் விவகாரம் தொடர்பாக ஹோண்டுராஸ் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடைபெற்ற நிலையில், வழக்கில் ஜூவனை உடனடியாக கைது செய்ய கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.
இதையடுத்து, நூற்றுக்கும் மேற்பட்ட அதிரடிப்படை பொலிஸார் நேற்று தலைநகர் டெகுசிகல்பாவில் உள்ள ஜூவன் வீட்டை அதிரடியாக சுற்றி வளைத்து ஜூவனை கைது செய்தனர்.
இந்நிலையில் கைது செய்யபப்ட்ட ஜூவன் விரைவில் அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை போதைப்பொருள் கடத்தல் வழக்கில் முன்னாள் அதிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஹோண்டுராஸ் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.