பாடசாலைக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்திய முன்னாள் மாணவன்: பரபரப்பு சம்பவம்
கேரளாவில் உள்ள பாடசாலை ஒன்றில் நுழைந்த முன்னாள் மாணவன் பையில் இருந்த துப்பாக்கியை எடுத்து மேல் நோக்கி சுட்ட சம்பவம் அங்கு பெரும் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கேரளாவில் உள்ள திரிச்சூர் மாவட்டம் நெய்க்கானல் பகுதியில் விவேகோடயம் என்ற தனியார் உயர்நிலை பாடசாலை ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வழக்கம்போல் இன்றையதினம் (21-11-2023) காலை வகுப்பு கூடியது.
அப்போது, முன்னாள் மாணவர் ஒருவர் காலை 10.30 மணியளவில் அத்துமீறி பள்ளிக்குள் நுழைந்துள்ளார். அவர், வகுப்பறையில் நுழைந்த பின், பையலிருந்து துப்பாக்கி ஒன்றை எடுத்துள்ளார்.
பின்னர், வானை நோக்கி சுட்டுள்ளார். இதனால், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அதிர்ச்சியில் நடுங்கி போனார்கள். இதுபற்றி தகவல் அறிந்து வந்த பொலிஸார், அந்த இளைஞரை பிடித்து சென்றனர்.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
அவரிடம் நடந்த விசாரணையில், திரிச்சூர் மாவட்டத்தின் முலாயம் பகுதியை சேர்ந்த 19 வயதான ஜெகன் என்பதும், அவர் அந்த பள்ளியின் முன்னாள் மாணவர் என்றும் தெரிய வந்தது.
இது தொடர்பில் சி.சி.ரி.வி. காட்சியில், முதலில் பள்ளி முதல்வரின் அறைக்கும், பின்னர் பணியாளர் அறை மற்றும் வகுப்பறைகளுக்குள்ளும் அந்த மாணவர் காட்சிகள் உள்ளன.
அவர், ஆசிரியர்களுக்கான அறையில், கையில் துப்பாக்கியுடன் அமர்ந்திருக்கும் காட்சி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு வைரலானது.
பாடசாலை நாட்களில் அந்த இளைஞர் போதைக்கு அடிமையாக இருந்தவர் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
இந்த அச்சுறுத்தலை ஏற்படுத்துவதற்கான நோக்கம் பற்றி எதுவும் தெரியவில்லை. அந்த இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படும்.
அதில், அவர் மதுபானம் அல்லது போதை பொருளை பயன்படுத்தினாரா? என்பது பற்றி அறியப்படும் என திரிச்சூர் நகர கிழக்கு பொலிஸார் தெரிவித்தனர்.