போதைப்பொருள் மற்றும் துப்பாக்கியுடன் நால்வர் கைது!
கனடாவின் வின்ட்சர் நகரில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, 47,000 டொலர் பெறுமதியான போதைப்பொருட்கள், பணம் மற்றும் துப்பாக்கி ஒன்றுடன் நால்வர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக வின்ட்சர் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளைத் தொடர்ந்து, திங்கட்கிழமை அதிகாலை 5 மணியளவில் லில்லி மேக் பவுல்வர்ட், லோசன் வீதி மற்றும் டுசார்ம் வீதி ஆகிய பகுதிகளில் உள்ள மூன்று வீடுகளில் சோதனை ஆணைகள் நிறைவேற்றப்பட்டன.
இதன்போது குறித்த வீடுகளிலிருந்த 23 வயதுடைய இருவர், 24 வயதுடைய ஒருவர் மற்றும் 25 வயதுடைய ஒருவர் என மொத்தம் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குளோக் 19 ஜென்5 ரக 9 மி.மீ கைத்துப்பாக்கி, 278.5 கிராம் கொக்கெய்ன், 300-க்கும் மேற்பட்ட ஒக்ஸிகோடோன் மாத்திரைகள், 51 ஹைட்ரோமோர்ஃபோன் மாத்திரைகள், 9,160 கனேடிய டொலர் ரொக்கப் பணம், 61 அமெரிக்க டொலர் ரொக்கப் பணம், டிஜிட்டல் தராசு மற்றும் போதைப்பொருள் பொதியிடும் பொருட்கள், கடன் விபரப் பட்டியல் மற்றும் பல கையடக்கத் தொலைபேசிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட நால்வர் மீதும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத ஆயுதம் வைத்திருந்தமை தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.