குவைத்தில் அமெரிக்க விமானப் படைத் தளம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்
குவைத்தில் அமைந்துள்ள அமெரிக்காவின் அலி அல் சலிம் விமானப் படைத் தளத்தைக் குறிவைத்து புதன்கிழமை அதிகாலை ஈரான் ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, பல வாரங்களுக்குப் பின்னர் குவைத்தில் வான் பாதுகாப்பு எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டுள்ளது.
குவைத்தில் உள்ள வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஏவுகணை ஏவுதளங்களைக் குறிவைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
எனினும், ஈரானின் ட்ரோன் தாக்குதல்களைத் தமது வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்துள்ளதாகக் குவைத் இராணுவம் அறிவித்துள்ளது.

தாக்குதலால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான விபரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.
அமெரிக்க நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தல் முடிவுகளில் பின்னடைவைச் சந்தித்ததைத் தொடர்ந்து, ட்ரம்ப் நிர்வாகத்தின் கவனம் ஈரான் விவகாரத்திலிருந்து மாறியுள்ள நிலையில், பஹ்ரைனைத் தொடர்ந்து ஈரானால் குறிவைக்கப்படும் இரண்டாவது வளைகுடா நாடாக குவைத் அமைந்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள குவைத் வெளியுறவு அமைச்சகம், இது நாட்டின் பாதுகாப்புக்கும் ஸ்திரத்தன்மைக்கும் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் எனத் தெரிவித்துள்ளது.
இதனிடையே, யேமனில் ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் சவூதி தலைமையிலான கூட்டுப் படையினர் நடத்திய தீவிர வான்வழித் தாக்குதல்களில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
தலைநகர் சனா மற்றும் அம்ரான் உள்ளிட்ட மாகாணங்களில் ஏவுகணைக் கிடங்குகள், ட்ரோன் தயாரிப்பு மையங்கள் உள்ளிட்ட 60 இராணுவ இலக்குகள் அழிக்கப்பட்டுள்ளதாகக் கூட்டுப் படையின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் துர்க்கி அல்-மால்கி தெரிவித்துள்ளார்.