ரஷ்ய கோடீஸ்வரரிடம் ரூ.7,382 கோடி ஜீவனாம்சம் கோரும் முன்னாள் மனைவி
ரஷ்யாவின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான விளாதிமீர் பொடானினின் முன்னாள் மனைவி நடாலியா பொடானினா, விவாகரத்து தொடர்பான நிதி நிவாரணமாக 7,382 கோடி ரூபாய் கோரி பிரிட்டன் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்தக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டால், பிரிட்டனின் மிகப்பெரிய விவாகரத்து நிதி நிவாரண வழக்காக இது அமையும் எனக் கூறப்படுகிறது.
சுரங்கத் தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ள விளாதிமீர் பொடானின், உலகின் முன்னணி பல்லேடியம் மற்றும் நிக்கல் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான 'நோரில்ஸ்க் நிக்கல்' நிறுவனத்தின் கணிசமான பங்குகளை வைத்துள்ளார்.

ஃபோர்ப்ஸ் தகவல்களின்படி, 2018ஆம் ஆண்டிலிருந்து அவரது சொத்து மதிப்பு ஏறத்தாழ இருமடங்காக அதிகரித்துள்ளது. விளாதிமீர் பொடானினுக்கும் நடாலியாவுக்கும் 1983ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
மூன்று குழந்தைகளுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து வாழ்ந்த இவர்கள், 2014ஆம் ஆண்டு ரஷ்யாவில் விவாகரத்துப் பெற்றனர்.
அப்போது நடாலியாவுக்கு 30.9 மில்லியன் பவுண்டுகள் (சுமார் 380 கோடி ரூபாய்) ஜீவனாம்சமாக வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
எனினும், அந்தத் தொகை போதுமானதல்ல என நடாலியா தொடர்ந்து வாதிட்டு வருகிறார். இதையடுத்து, 2019ஆம் ஆண்டு பிரிட்டன் நீதிமன்றத்தில் அவர் நிதி நிவாரணம் கோரி மனுத்தாக்கல் செய்தார்.
ஆரம்பத்தில் நிராகரிக்கப்பட்ட மனு, பிரிட்டனுடன் அவருக்குப் போதுமான தொடர்பு இருப்பதாக உயர்நீதிமன்றம் தெரிவித்ததைத் தொடர்ந்து மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
தனது மூன்று குழந்தைகளையும் குடும்பத்தையும் கவனித்துக்கொண்டதன் மூலம் கணவரின் தொழில் சாம்ராஜ்ய வளர்ச்சிக்குத் துணைநின்றதாக நடாலியா வாதிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில், முன்னாள் கணவரின் சொத்தில் இருந்து 7,382 கோடி ரூபாய் பெறுமதியான பங்கை வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.
அந்தக் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், லண்டனில் உள்ள பங்களாவையும் அதன் பராமரிப்புக்காக 10 மில்லியன் பவுண்டுகளையும் வழங்க வேண்டும் என மாற்றுக் கோரிக்கையும் முன்வைத்துள்ளார்.
இந்த வழக்கின் தீர்ப்பு சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.