ஷேக் ஹசீனாவின் சொந்த ஊரில் வெடித்த வன்முறை ; பொலிஸ் வாகனங்களுக்குத் தீ வைப்பு
பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரக் கோரி, அவரது சொந்த மாவட்டமான கோபால்கஞ்சில் அவாமி லீக் கட்சியினர் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற இந்தப் போராட்டத்தின்போது பொலிஸ் வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டதுடன், பொலிஸ் சோதனைச் சாவடியும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஷேக் ஹசீனா ஆட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்டிருந்த நினைவுச் சின்னமும் போராட்டக்காரர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

பங்களாதேஷத்தில் கடந்த 2024ஆம் ஆண்டு மாணவர்கள் முன்னெடுத்த போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு இந்தியாவுக்குச் சென்றார்.
அன்றிலிருந்து அவர் இந்தியாவில் வசித்து வருகிறார். இதற்கிடையில், போராட்டக்காரர்கள் மீதான அடக்குமுறை தொடர்பான வழக்கில், 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பங்களாதேஷ் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஷேக் ஹசீனாவுக்கு அவர் இல்லாத நிலையில் மரண தண்டனை விதித்தது.
எனினும், இந்தத் தீர்ப்பையும் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளையும் அவர் நிராகரித்துள்ளார்.
இந்நிலையில், எதிர்வரும் டிசம்பர் மாதம் பங்களாதேஷத்திற்குத் திரும்பி சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்காக புதிய கடவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டை வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அதேவேளை, அவரை இந்தியாவிலிருந்து நாடு கடத்தி அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளையும் பங்களாதேஷ அரசு முன்னெடுத்து வருகிறது.

இந்தப் பின்னணியில், ஷேக் ஹசீனாவின் சொந்த மாவட்டமான கோபால்கஞ்சில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவாமி லீக் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது பொலிஸாரின் தடுப்புகளை உடைத்துக்கொண்டு போராட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கியதுடன், பொலிஸ் வாகனங்களுக்குத் தீ வைத்தும், பொலிஸ் சோதனைச் சாவடியைச் சேதப்படுத்தியும் வன்முறையில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து கோபால்கஞ்ச் பகுதியில் துணை இராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொலிஸாரும் கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். ஷேக் ஹசீனாவை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரும் வரை தங்களது போராட்டம் தொடரும் என அவாமி லீக் கட்சியினர் அறிவித்துள்ளனர்.