டொரண்டோவில் வீடொன்றில் துப்பாக்கிச் சூடு: 4 பேர் காயம்!
டொரண்டோவின் பிரைடில் பாத் பகுதியில் உள்ள குடியிருப்பு வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் பேவியூ மற்றும் லாரன்ஸ் அவென்யூ பகுதிகளுக்கு அருகாமையில் அதிகாலை 3:45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பொலிஸார், குறித்த வீட்டிற்குள் மூன்று நபர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும், காயமடைந்தவர்களின் நிலைமை குறித்த தெளிவான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
துப்பாக்கிச் சூட்டை நடத்திய மூன்று சந்தேகநபர்கள் எஸ்.யு.வி ரக காரில் தப்பிச் சென்றுள்ளதாகவும், சந்தேகநபர்கள் குறித்த விவரங்கள் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் டொரண்டோ பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.