மடகாஸ்ரின் முன்னாள் மன்னரது மண்டை ஓட்டை ஒப்படைத்த பிரான்ஸ்
19ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சு படைகளால் தலை துண்டிக்கப்பட்ட மலகாஸி மன்னர் டோயராவின் மண்டை ஓடு என நம்பப்படும் மண்டையோட்டை பிரான்ஸ் அரசாங்கம் திருப்பி ஒப்படைத்துள்ளது.
இந்த மண்டையோடுகள் சுமார் ஒரு நூற்றாண்டுகளாக பிரான்ஸ் வசமிருந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிரிக்காவின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள இந்த தீவு நாட்டிற்கு மண்டை ஓடுகளை திருப்பி அளிப்பது, 2023ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மனித எச்சங்களை இறுதிச் சடங்குகளுக்காக ஒரு நாட்டிற்கு திருப்பி அளிக்க அனுமதிக்கும் பிரெஞ்சு சட்டத்தை முதல் முறையாக அமல்படுத்துவதைக் குறிக்கிறது.
1890களில் மடகாஸ்கரின் மேற்குப் பகுதியில் வாழ்ந்த சகலாவ மக்களின் இராச்சியங்களை பிரான்ஸ் கைப்பற்றி, அவர்களை புதிதாக உருவாக்கப்பட்ட பிரெஞ்சு காலனியில் இணைத்தது.
1960இல் பிரான்ஸிடமிருந்து சுதந்திரம் பெற்ற மடகாஸ்கர் நாட்டிற்கு திருப்பி அளிக்கப்பட்ட மூன்று சகலாவ மண்டை ஓடுகளில் ஒரு மண்டை ஓடு மன்னர் டோயராவுடையது என பிரெஞ்சு கலாச்சார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
குறித்த மன்னர் 1897இல் பிரெஞ்சு படைகளால் தூக்கிலிடப்பட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.
மூன்று சகலாவ மண்டை ஓடுகளின் திருப்பி அளிப்பைக் குறிக்கும் விழாவில் பிரெஞ்சு கலாச்சார அமைச்சர் ரஷிதா டாடி உரையாற்றினார்.
மற்ற இரண்டு மண்டை ஓடுகள் மன்னருடன் போராடிய இரு படைத்தளபதிகளுடையவை என மடகாஸ்கரின் தகவல் தொடர்பு மற்றும் கலாச்சார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.