கனடாவில் இலவச அத்தியாவசிய பொருள் அங்காடி திறப்பு
கனடாவில் உள்ள நகரமொன்றில் முற்றிலும் இலவச பல்பொருள் அங்காடி ஒன்று திறக்கப்பட உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த அங்காடில், ஒரு குடும்பத்துக்கு ஒரு வாரத்திற்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் என்றும் கூறப்படுகிறது.
கனடாவின் சஸ்காட்சுவான் மாகாணத்திலுள்ள ரெஜினா நகரில் அமைந்துள்ள ரெஜினா உணவு வங்கியின் வாடிக்கையாளர்களுக்காகவே இந்த ஏற்பாடு செய்யப்படுள்ளது. கோவிட் தொற்றின் பின்னர், கனடாவில் உணவு வங்கிகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், ரெஜினா நகரில் மாத்திரம் உணவு வங்கிகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 25 சதவிகிதம் வரை உயர்வடைந்துள்ளது.
இதனையடுத்தே, இந்த கோடையில் இலவச பல்பொருள் அங்காடி ஒன்றை திறக்க திட்டமிடப்பட்டு வருகிறது.
இந்த பல்பொருள் அங்காடிக்கு பொருட்களை பெற்றுக்கொள்ள வருபவர்கள், தங்களின் சில அடிப்படை விவரங்களைக் கூறி பதிவு செய்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதனை தொடர்ந்து, அனுமதி பெற்றதன் பின்னர் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை அவர்கள் இந்த பல்பொருள் அங்காடியில், 200 டொலர்கள் மதிப்புள்ள அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிடப்படுகின்றது.