கனடாவில் போராட்டத்தில் ஈடுபடும் லொறி சாரதிகளுக்கு குவிந்த நிதி: வாயைப் பிளக்க வைத்த தொகை
கனடாவில் போராட்டத்தில் ஈடுபடும் லொறி சாரதிகளுக்கு ஆதரவாக பொதுமக்கள் அளித்த நிதி தொடர்பில் தகவல் வெளியாகி வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடா தலைநகரில் இன்று நான்காவது நாளாக கட்டாய தடுப்பூசி விதிகளை விலக்க வலியுறுத்தி கனரக லொறி சாரதிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் இணையத்தளம் ஊடாக பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டியும் வந்துள்ளனர். இந்த நிலையில், இதுவரை இவர்களின் போராட்டத்தை ஆதரித்து சுமார் 9.5 மில்லியன் கனேடிய டொலர் நிதியாக அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மட்டுமின்றி, கனடாவை பொறுத்தமட்டில், லொறி சாரதிகளுக்கு ஆதரவாக திரட்டப்பட்டுள்ள இந்த நிதியானது இரண்டாவது பெரிய தொகை என தெரிய வந்துள்ளது.
2018ல் Saskatchewan பகுதியில் சாலை விபத்தில் சிக்கிய ஹொக்கி விளையாட்டு வீரர்களுக்காக திரட்டப்பட்ட நிதியே கனடாவில் சாதனையாக கருதப்படுகிறது.
தற்போது தடுப்பூசி மறுப்பாளர்களான லொறி சாரதிகளுக்கு ஆதரவாகவும் பெருந்தொகை திரட்டப்பட்டுள்ளது. மேலும், இதுவரை 1 மில்லியன் டொலர் தொகை மட்டுமே லொறி சாரதிகள் அமைப்பு கைப்பற்றியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
திரட்டப்பட்டுள்ள இந்த தொகையை ஆக்கப்பூர்வமாக செலவிட சாரதிகள் அமைப்பு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.