சீனாவின் உரிமை மீறல்களைக் கண்டித்து பிரெஞ்சு எடுத்த தீர்மானம்
சீனாவின் உரிமை மீறல்களைக் கண்டித்து பிரெஞ்சு பாராளுமன்றம் கடந்த மாதம் உய்குர் தீர்மானத்தை நிறைவேற்றியது.மேற்குலகின் சீனாவுக்கு எதிரான போரில் ஒரு புதிய கட்டத்தை இது குறிப்பதாக கூறப்படுகின்றது.
சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கப்படுவதற்கு முன்னதாகவே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் காரணமாக பிரான்ஸ் மற்றும் சீனா இடையேயான உறவுகள் சீர்குலையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்படி சின்ஜியாங் மாகாணத்தில் மனித உரிமைகள் விவகாரங்கள் தொடர்பாக பிரெஞ்சு பாராளுமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தை எதிர்த்தது. மேலும் இருதரப்பு உறவுகளுக்கு அது ஏற்படுத்தக்கூடிய 'சேதம்' குறித்து பிரான்சில் உள்ள சீன தூதரகம் கவலையை வெளியிட்டது.
தீர்மானம் வேண்டுமென்றே சீனாவை களங்கப்படுத்தியுள்ளதாகவும் உள் விவகாரங்களில் தலையிட்டுள்ளதாகவும் சீன தூதரக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்தப் பிரச்சினையில் பல சந்தர்ப்பங்களில் பிரான்சுடன் சீனா வலுவான உரையாடலை நடத்தியது. சின்ஜியாங் தொடர்பான பிரச்சினைகள் இன, மத அல்லது மனித உரிமைகளுடன் தொடர்புடையது அல்ல.
மாறாக பயங்கரவாத எதிர்ப்பு, தீவிரவாத எதிர்ப்பு மற்றும் தீவிரமயமாக்கல் மற்றும் சீனாவின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் தேசியப் பாதுகாப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது என்று தூதரகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.