கனடாவில் இந்த வகை உணவு குறித்து விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
கனடாவில் சில வகை குளிரூட்டப்பட்ட பேஸ்ட்ரிகளை பயன்படுத்த வேண்டாம் என கனடா உணவு பரிசோதனை நிறுவனம் (CFIA) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த பேஸ்ட்ரிகளில் சால்மொனெல்லா பாக்டீரியா பாதிப்பு ஏற்பட்டிருக்கக்கூடியதாக சந்தேகிப்பதாகத் தெரிவித்துள்ளது.
இரு பண்டக்குறிகளைக் கொண்ட பதப்படுத்தி குளிரூட்டப்பட்ட பேஸ்ட்ரிகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்துவதனை உடன் நிறுத்த வேண்டுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Sweet Cream பிராண்ட் மற்றும் D. Effe T. பிராண்ட் ஆகிய இரண்டு வகை பேஸ்ட்ரிகளும் சந்தையிலிருந்து மீளப் பெறும் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
குறிப்பாக, கீழ்காணும் வகைகள் பாதிக்கப்பட்டுள்ளன:
• அப்பல்லினி மிக்னான் Apollini Mignon
• மினி லோப்ஸ்டர் டெயில் Mini Lobster Tail
• அப்பல்லோ கே2 Apollo K2
• பிக் லொப்ஸ்டெர்டெயில் Big Lobstertail
• பொக்லிடா நாபோலி Sfogliata Napoli
• பிக் ஸ்ஃபோக்லியா நாபோலி Big Sfoglia Napoli
• மினி ஸ்ஃபோக்லியாடெல்லா Mini Sfogliatella
• மினி பொக்லிடெல்லா சியாசொலெட்டா Mini Sfogliatella Cioccolato
அல்பெர்டா, மானிடோபா, நோவா ஸ்கோஷியா, ஒன்டாரியோ மற்றும் கியூபெக் ஆகிய மாகாணங்களில் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனினும் மற்ற மாகாணங்களிலும் இவ்விதமான தயாரிப்புகள் விநியோகமாகியிருக்கக்கூடும் என்பதால், மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த தயாரிப்புகள் சில நேரங்களில் அடையாளம் இல்லாமல், பணியாளரால் வழங்கப்படும் பேக்கேஜ்களிலும் அல்லது பிராண்ட் பெயர் மற்றும் தயாரிப்பு பெயர் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டிருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சால்மொனெல்லா பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட உணவுகள் பொதுவாக வாசனையிலோ தோற்றத்திலோ மாற்றம் தெரியாமல் இருந்தாலும், அதை உண்ணும் போது சீரிய அல்லது உயிருக்கு ஆபத்தான தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிறிய பிள்ளைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் அதிக பாதிப்புக்குட்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
• காய்ச்சல் • தலையடிப்பு • குமட்டல் மற்றும் வாந்தி • வயிற்று வலி • வயிற்றுப்போக்கு போன்றன சால்மொனெல்லா பாதிப்பு அறிகுறிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற உணவுகள் சம்பந்தப்பட்ட தயாரிப்புகளை உடனே பயன்படுத்துவதை நிறுத்தி, விற்பனையாளரிடம் திருப்பிச் செலுத்துமாறு கனடா உணவு பரிசோதனை நிறுவனம் CFIA வலியுறுத்தியுள்ளது.