உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு மக்களை சந்தித்த பாப்பரசர்
உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு வத்திக்கானின் செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் "ஈஸ்டர் நல்வாழ்த்துகள்" தெரிவிக்க பாப்பரசர் பிரான்சிஸ் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் தோன்றினார்.
வைத்தியசாலையிலிருந்து சிகிச்சை பெற்று குணமாகிய பின்னர் பாப்பரசர் பொது வெளியில் தோன்றுவதைத் தவிர்த்துக் கொண்ட நிலையில் ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை பாப்பரசரின் வருகையினை மக்கள் மிகவும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்நிலையிலேயே பாப்பரசர் மக்கள் முன் தோன்றினார்.
ஆசீர்வாதத்திற்குப் பிறகு, பாப்பரசர் செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தைச் சுற்றி அழைத்துச் செல்லப்பட்டார். அவர் கூட்டத்தின் வழியாகச் செல்லும்போது குழந்தைகளுக்கு ஆசீர்வாதங்களையும் வழங்கினார்.
"மத சுதந்திரம், சிந்தனை சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் மற்றும் மற்றவர்களின் கருத்துக்களுக்கு மரியாதை வழங்கவேண்டும் " என்று பாப்பரசர் தனது ஈஸ்டர் வாழ்த்து உரையில் கூறினார்.
மோதல் "மரணத்தையும் அழிவையும் ஏற்படுத்துகிறது" மற்றும் "மோசமான மனிதாபிமான சூழ்நிலையை" உருவாக்குவதால், காஸா மக்களை, பாப்பரசர் நினைவு கூர்ந்தார். இதேவேளை வளர்ந்து வரும் உலகளாவிய யூத எதிர்ப்பு "கவலைக்குரியது" என்றும் கூறினார்.
" இஸ்ரேல் – காஸா போர் நிறுத்தத்தை ஏற்படுத்தவும் உக்ரைன் போரில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் "நீதியான மற்றும் நீடித்த அமைதியை அடைவதை நோக்கமாகக் கொண்ட முயற்சிகளைத் தொடர வேண்டும் " என்று பாப்பரசர் தனது உரையில் கூறியமையும் குறிப்பிடத்தக்கது.