ரஷ்யாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த ஜி-7 நாடுகள்
ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடை விதிக்கப்படும் என ஜி-7 நாடுகள் எச்சரித்துள்ளன.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பு நடத்தினால் ரஷ்யாவின் பொருளாதாரம் நிலைகுலைந்து போகும் என அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பானை உள்ளடக்கிய ஜி-7 நாடுகளின் வெளியுறவு துறை அமைச்சர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
மேலும் உக்ரைனின் இறையாண்மை, எல்லை பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்டவற்றை காக்க சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச நிதி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட உறுதி பூண்டுள்ளதாக ஜி-7 நாடுகள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையே, பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காணாமல், உக்ரைன் மீது போர் தொடுத்தால், ரஷ்யா கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஜோ பைடன் தலைமையிலான அரசாங்கம் எச்சரித்துள்ளது.
ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா தயாராக இருந்தால் சுமூக தீர்வுக்கான பாதை திறந்து இருப்பதாகவும், அதை விடுத்து உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையில் ரஷ்யா ஈடுபட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் வெள்ளை மாளிகையின் இணை பத்திரிக்கை செயலர் கரைன் ஜீன் பெர்ரி தெரிவித்தார்.
இதேவேளை உக்ரைன் எல்லையில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அங்குள்ள பிரஜைகளை வெளியேறுமாறு பல நாடுகள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.