ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த ஜி7 நாடுகள்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளுக்கு வழிவகுக்கும் என்று ஜி-7 நாடுகள் எச்சரித்துள்ளன.
அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான் உள்ளிட்ட ஜி-7 வெளியுறவு அமைச்சர்கள், கூட்டுத் தடை ரஷ்யாவின் பொருளாதாரத்தை பாதிக்கும் என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர். உக்ரைனின் இறையாண்மை, எல்லைப் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்தைப் பாதுகாக்க, சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச நிதி நிறுவனங்களுடன் ஒத்துழைக்க G-7 நாடுகள் உறுதியளித்தன.
இதற்கிடையில், பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு கண்டு உக்ரைனுடன் போர் தொடுக்காவிட்டால் ரஷ்யா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஜோ பிடன் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் எச்சரித்துள்ளது.
ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளுக்கு ரஷ்யா தயாராக இருந்தால், சுமூக தீர்வுக்கான பாதை திறந்திருக்கும் என்றும், உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் வெள்ளை மாளிகையின் வெளியுறவுத்துறை இணை செயலாளர் கரேன் ஜீன் பெர்ரி கூறினார்.