போரினால் முடங்கிய காசா வைத்தியசாலைகள் ; கடும் நெருக்கடி
இஸ்ரேல் - ஹமாஸ் மோதலால் காசாவில் தொடர்ந்து நீடிக்கும் போர் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் கடும் பற்றாக்குறை காரணமாக, அங்குள்ள சுகாதார அமைப்பு முற்றிலும் சீர்குலைந்து வரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தகவல்கல் வெளியாகியுள்ளன.
இதனால் டயாலிசிஸ் நோயாளிகள், உறுப்பிழந்தவர்கள் மற்றும் காயங்களிலிருந்து மீண்டு வருபவர்கள் உயிர்காக்கும் வைத்தியக் கவனிப்பு இன்றி தவித்து வருகின்றனர்.

காசா நகரத்தில் உள்ள அல்-ஷிஃபா வைத்தியசாலையின் டயாலிசிஸ் பிரிவில், நோயாளிகள் வரிசையாக அமர்ந்து பல மணிநேர சிகிச்சையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
வடக்கு காசாவின் ஜபாலியாவைச் சேர்ந்த 14 வயது சிறுமி, சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டு இங்கு தொடர்ந்து டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியதுறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டயாலிசிஸ் இயந்திரங்களை இயக்குவதற்குத் தேவையான சோடியம் பைகார்பனேட் பற்றாக்குறை காரணமாக, காசாவில் உள்ள 50 சதவீத டயாலிசிஸ் இயந்திரங்கள் முற்றிலும் செயல்படாமல் முடங்கியுள்ளன.
சிறுநீரக செயலிழப்பு நோயாளிகளுக்குச் சிகிச்சையளித்த 7வைத்தியசாலைகளில், நூரா அல்-காபி டயாலிசிஸ் மையம் உள்ளிட்ட பல மையங்கள் போரில் அழிக்கப்பட்டதால், தற்போது 4 வைத்தியசாலைகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன.
வைத்திய வசதிகளின் சீர்குலைவு காரணமாகச் சிறுநீரகச் செயலிழப்பு நோயாளிகள் கவலைக்கிடமான விகிதத்தில் உயிரிழந்து வருகின்றனர் போருக்கு முன்பு காசாவில் 1,200 சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் இருந்தனர்.
தேவையான டயாலிசிஸ் சிகிச்சைகள் கிடைக்காததாலும், அத்தியாவசிய மருந்துகள் பற்றாக்குறையாலும் 470-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பாலஸ்தீனிய மனித உரிமைகள் மையத்தின் தகவல்படி, தற்போது இந்த நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 700 ஆகக் குறைந்துள்ளது.
தொடர்ச்சியான தாக்குதல்கள் மற்றும் எல்லைக் கட்டுப்பாடுகள் காரணமாகக் காசாவின் வைத்தியத் துறை கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றது.