ட்ரோன்களை சுட்டு வீழ்த்த பொலிஸாருக்கு அனுமதி வழங்கிய நாடு
ஐரோப்பா முழுவதும் விமான நிலையங்களில் சீர்குலைவை ஏற்படுத்தி வரும் மர்ம ட்ரோன்களுக்கு எதிராக ஜெர்மனிய அரசு கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.
புதிய சட்டத்தின் மூலம், விமானப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தும் அதிகாரம் ஜெர்மன் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த சட்ட முன்மொழிவு புதன்கிழமை அமைச்சரவை அனுமதி பெற்றுள்ளது, பாராளுமன்றத்தில் அங்கீகாரம் கிடைத்ததும் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்பு ட்ரோன்கள்
ட்ரோன்கள் எங்கள் பாதுகாப்பை அச்சுறுத்துகின்றன. அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்,” என சமூக வலைதளமான சமூக ஊடகப் பதிவில் ஜெர்மன் சான்சலர் பிரிட்ரிக் மெர்ச் தெரிவித்துள்ளார்.
பொலிஸாரின் அதிகாரத்தை பலப்படுத்தி, ட்ரோன்களை விரைவாக கண்டறிந்து எதிர்கொள்ள வழிவகுக்கிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய ட்ரோன்கள் பெரும்பாலும் ரஷ்யாவுடன் தொடர்புடையவை என சந்தேகிக்கப்படுகின்றன.
அவை ஆயுதங்கள் இல்லாத கண்காணிப்பு ட்ரோன்கள்” எனவும் மெர்ச் குறிப்பிட்டுள்ளார்.
புதிய சட்டத்தின் படி, போலீசார் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்துதல், லேசர் கருவிகள் மூலம் தாக்குதல், அல்லது சிக்னல் ஜாமிங் தொழில்நுட்பம் பயன்படுத்தி கட்டுப்பாட்டு இணைப்பை துண்டித்தல் போன்ற முறைகளில் ட்ரோன்களை நிறுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளியன்று, மியூனிக் விமான நிலையத்தில் மர்ம ட்ரோன்கள் பறந்ததால், பல விமானங்கள் திசை மாற்றம் செய்யப்பட்டது அல்லது ரத்து செய்யப்பட்டது.
இதனால் 10,000க்கும் மேற்பட்ட பயணிகள் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டது. ரஷ்யா உக்ரைனில் முழுமையான படையெடுப்பை நடத்திய 2022 முதல், ஐரோப்பிய தலைவர்கள் ரஷ்யாவை முக்கிய பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் கருதுகின்றனர்.