மெட்டா நிறுவனத்தின் மெய்நிகர் தோற்ற விளையாட்டில் தவறான செயற்பாடு
மெட்டா நிறுவனத்தின் மெய்நிகர் தோற்ற விளையாட்டில் (Virtual reality game) பிரிட்டனைச் சேர்ந்த 16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மெய்நிகர் கருவிகளின் (Virtual reality handset) மூலம் விளையாடப்படும் ஹொரிசான் வோர்ல்ட்ஸ் (Horizon worlds) எனும் இணையதள விளையாட்டு உண்மையான அனுபவங்களை அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
அந்த விளையாட்டில் பங்கேற்ற சில நபர்களால் அந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி மன அளவில் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளானதாக பிரிட்டன் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
உடலளவில் எந்த பாதிப்புகளும் ஏற்பட்டிடாத நிலையில் மனதளவிலான பாதிப்புகள் சிறுமிக்கு அதிகமாக ஏற்பட்டுள்ளதாகவும், சட்டம் இந்த பிரச்சினையை முக்கியமானதாக கருதுவதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
பிரிட்டன் உள்துறை செயலாளர்
பிரிட்டன் உள்துறை செயலாளர் ஜேம்ஸ் க்லெவர் அந்தக் குழந்தைக்கு பாலியல் வன்கொடுமையால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.
இந்த பிரச்சினைக்கு கவனமளிக்க வேண்டும் எனத் தெரிவித்ததோடு, இதுபோன்ற குற்றங்களைக் குறைந்து மதிப்பிடக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.
மெட்டா நிறுவனத்தின் ஹொரிசான் வோர்ல்ட்ஸ் (Horizon worlds) எனப்படும் அந்த மெய்நிகர் விளையாட்டில் இதுபோன்ற குற்றங்கள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் சட்ட ரீதியாக நடவடிக்கைகள் எடுப்பது இதுவே முதல் முறை எனவும் கூறப்படுகிறது.
மெட்டா நிறுவனம் இந்த சம்பவம் தொடர்பாக தங்கள் வருத்தத்தையும் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு இந்த தளத்தில் இடமில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.