பாரீஸில் பகீர் சம்பவம்; கத்தி முனையில் 400,000 யூரோக்கள் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை
பிரான்ஸ் பரிஸின் 4ஆம் வட்டாரத்தில் உள்ள Châtelet பகுதியில், கத்தியை காட்டி இரு பாதசாரிகளிடம் இருந்து 395,000 யூரோக்கள் மதிப்புள்ள ரிச்சர்ட் மில் (Richard Mille) கை கடிகாரம் உள்ளிட்ட ஆடம்பரப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.10 மணியளவில் place du Châtelet பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கத்திகளுடன் வந்த பலர் பாதசாரிகளை வழிமறித்து கொள்ளை
கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 400,000 யூரோக்களை தாண்டுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கத்திகளுடன் வந்த பலர் இரு பாதசாரிகளை வழிமறித்து மிரட்டியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, சுமார் 395,000 யூரோ மதிப்புள்ள செம்மஞ்சள் நிற ரிச்சர்ட் மில் கடிகாரம், ஐபோன் மற்றும் Louis Vuitton நிறுவனத்தின் தலைக்கவசம் ஆகியவை பறிக்கப்பட்டுள்ளன.
கொள்ளையர்கள் பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் ஒருவரை அதே நாளில் BAC குற்றத்தடுப்புப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மற்றொரு சந்தேகநபர் பை ஒன்றுடன் கைது செய்யப்பட்ட நிலையில், அதற்குள் பல தொலைபேசிகள், அதில் பாதிக்கப்பட்ட ஒருவரின் தொலைபேசியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனினும், விலையுயர்ந்த கடிகாரம் உள்ளிட்ட ஏனைய பொருட்கள் இதுவரை மீட்கப்படவில்லை. கைது செய்யப்பட்ட இருவரையும் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காட்டியுள்ள நிலையில், அவர்கள் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.