கோட்டாபய தொடர்பில் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு வெளியிட்ட முக்கிய தகவல்
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) எங்களிடம் தஞ்சம் எதுவும் கேட்கவில்லை என சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியான சூழலால் மக்கள் பல மாதங்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக அவர்கள் போராட்டங்களை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்த சூழலில், ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த 9-ம் திகதி இலங்கை ஜனாதிபதி மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, மாலைத்தீவுக்கு குடும்பத்துடன் தப்பி சென்ற கோட்டாபய ராஜபக்ஷ, மாலைத்தீவில் இருந்தபடியே சிங்கப்பூருக்கு செல்ல இருக்கிறார் என்று அந்நாட்டில் இருந்து வெளிவரும் ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டது.

இதன்படி, இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது மனைவியுடன் சவுதி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எஸ்.வி.788 ரக விமானத்தில் இன்று காலை 11.30 மணியளவில் புறப்பட்டு உள்ளார்.
அவர்கள் இன்று இரவு 7 மணியளவில் சிங்கப்பூர் சென்றடைய உள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்கள் இருவரும் சிங்கப்பூரிலேயே தங்குகின்றனர் என்றும் ஜெட்டாவுக்கு செல்லவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் இன்று வெளியிட்டு உள்ள செய்தியில், இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ தனிப்பட்ட பயணம் என்ற முறையில் சிங்கப்பூருக்கு வந்துள்ளார்.

அவர் எங்களிடம் தஞ்சம் எதுவும் கேட்கவில்லை. அவருக்கு தஞ்சம் அளிக்க ஒப்புதலும் வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        