குழந்தைகள் தொடர்பில் மருத்துவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை
சமூக வலைத்தளங்களில் பரவும் தவறான மருத்துவத் தகவல்கள் காரணமாக, பிறந்த குழந்தைகளுக்கு 'வைட்டமின் கே' ஊசி போடுவதை மறுக்கும் பெற்றோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இது குழந்தைகள் உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்றும் மருத்துவ உலகம் தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து டொராண்டோவில் உள்ள சன்னிபுரூக் மருத்துவமனையின் பிறந்த குழந்தைகள் நல நிபுணர் டொக்டர் யுஜின் என்ஜி தெரிவிக்கையில், "இத்தகைய சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிறந்த குழந்தைகளுக்கு இயல்பாகவே இரத்த உறைவுக்குத் தேவையான 'வைட்டமின் கே' சத்து குறைவாகவே இருக்கும். இந்நிலையைக் கட்டுப்படுத்தத் தவறினால், குழந்தைகளுக்கு மூளை உட்பட உடலின் பல்வேறு பகுதிகளில் கடுமையான இரத்தப்போக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.

வைட்டமின் கே குறைபாட்டால் ஏற்படும் இரத்தப்போக்கு, குழந்தைகளுக்கு மூளையில் இரத்தப்போக்கு ஏற்படும் அபாயத்தை 3 மடங்கு உயர்த்துகிறது என டாக்டர் என்ஜி எச்சரிக்கிறார். கனடிய சிறுவர் மருத்துவச் சங்கம் (CPS), குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே இந்த வைட்டமின் கே ஊசியைச் செலுத்தப் பரிந்துரைக்கிறது.
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இது நடைமுறையில் இருந்தாலும், அண்மைக்காலமாக இதை மறுக்கும் பெற்றோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
சுவீடனில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில், 2006 முதல் 2021 வரையிலான காலத்தில் ஊசியை மறுத்த பெற்றோரின் எண்ணிக்கை இரண்டு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
ஊசியில் உள்ள பொருட்கள், பதப்படுத்திகள் மற்றும் லுகேமியா (இரத்தப் புற்றுநோய்) ஏற்படும் என்ற முற்றிலும் ஆதாரமற்ற வதந்திகளைப் பெற்றோர் நம்புகின்றனர்.
அதிக அளவில் மருந்தைப் பயன்படுத்தும் பெரியவர்களுக்கு ஏற்படும் அரிதான தீவிர பக்கவிளைவுகள் குறித்த எச்சரிக்கைகளைச் சுட்டிக்காட்டி அச்சம் பரப்பப்படுகிறது.
ஆனால், குழந்தைகளுக்கு அளிக்கப்படும் குறைந்தளவு டோஸினால் இத்தகைய பக்கவிளைவுகள் ஏற்படுவது மிகவும் அபூர்வமானது.