இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம் ; மக்கள் அச்சம்
இந்தோனேஷியாவின் புளோரஸ் தீவில் அண்மையில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் பாதிப்புகள் முழுமையாக நீங்காத நிலையில், இன்று அதே பகுதியில் 5.9 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தின் புளோரஸ் தீவுக்கு அருகே கடந்த 15ஆம் திகதி 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
கடல்மட்டத்திலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அருகிலுள்ள மாகாணங்களிலும் உணரப்பட்டன.

இதையடுத்து அன்றைய தினம் மாலை வடக்கு சுமத்ரா பகுதியில் 6.8 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கமும் ஏற்பட்டது.
புளோரஸ் தீவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மங்கராய், கிழக்கு மங்கராய், சிக்கா, என்கடா மற்றும் எண்டே உள்ளிட்ட பகுதிகள் பெரும் பாதிப்பை சந்தித்தன.
இந்தப் பேரிடரில் இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளதுடன், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், புளோரஸ் தீவில் இன்று மீண்டும் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் தீவில் வசிக்கும் மக்கள் பீதியடைந்துள்ளனர்.