கனடாவில் 16 வயதுச் சிறுமி சுட்டுக்கொலை: காவல்துறை தீவிர விசாரணை
கனடாவின் எட்மண்டன் நகரில் உள்ள 139 அவென்யூ மற்றும் 32 ஸ்ட்ரீட் பகுதிக்கு அருகில் 16 வயதுச் சிறுமி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், தீவிர காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த 16 வயதுச் சிறுமியைக் கண்டறிந்தனர்.
காவல்துறையினர் அச்சிறுமிக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்தனர். எனினும், அவசர மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்தடைந்தபோது அச்சிறுமி உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இச்சம்பவத்தை மர்ம மரணமாகக் கருதி எட்மண்டன் காவல்துறையின் கொலை வழக்கு விசாரணைப் பிரிவு விசாரணையைக் கையில் எடுத்துள்ளது.

மரணத்திற்கான பின்னணி மற்றும் சூழ்நிலைகளைக் கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கூடுதல் விவரங்கள் கிடைக்கும் பட்சத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் 780-423-4567 என்ற எண்ணிலோ அல்லது கைபேசி மூலம் #377 என்ற எண்ணிலோ எட்மண்டன் காவல்துறையைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.