அமெரிக்காவுக்கு எதிராக தாக்குதல் கொள்கையை தீவிரப்படுத்தும் ஈரான்
அமெரிக்காவுடனான போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ள நிலையில், தனது இராணுவக் கொள்கையை தற்காப்பு நிலையிலிருந்து “முழுமையான தாக்குதல்” நிலைக்கு மாற்ற ஈரான் தீர்மானித்துள்ளதாக மூத்த ஈரானிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ரொய்ட்டர்ஸிடம் திங்கட்கிழமை தெரிவித்த அந்த அதிகாரி, ஹோர்முஸ் நீரிணை மற்றும் அதனைச் சூழ்ந்த பிராந்தியத்தில் பதற்றம் மேலும் அதிகரிக்கும் சாத்தியக்கூறுகளுக்கு ஈரானிய அமைப்புகள் தயாராக இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இராஜதந்திர முயற்சிகள் தோல்வியடைந்தால், அமெரிக்க கடற்படை முற்றுகையை முறியடிக்கும் வகையில் “சரியான நேரத்தில் துல்லியமான” இராணுவத் தாக்குதலை நடத்த ஈரான் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் நிறுத்தம் மற்றும் நிரந்தர சமாதானத்துக்கான முன்னேற்றம் தற்போது முடங்கியுள்ளதுடன், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை ஊடான எண்ணெய் கப்பல் போக்குவரத்தையும் மீள ஆரம்பிப்பதில் முன்னேற்றம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 17ஆம் திகதி இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான விரிவான உடன்பாட்டை எட்டுவதற்கு 60 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
இந்தக் கால அவகாசம் பரஸ்பர இணக்கத்தின் அடிப்படையில் நீடிக்கக்கூடியதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு தொடர்பில் இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த ஒப்பந்தம் நடைமுறையில் சிக்கலை எதிர்கொண்டது.
ஒப்பந்தத்தின் ஐந்தாவது சரத்து நீர்வழியை நிர்வகிக்கும் உரிமையை ஈரானுக்கு வழங்குவதாக தெஹ்ரான் தெரிவித்த நிலையில், அமெரிக்கா அந்த விளக்கத்தை நிராகரித்துள்ளது.
மேலும், அமெரிக்கா தனது ஒப்பந்தப் பொறுப்புகளை தொடர்ந்து மீறி வருவதாக ஈரான் குற்றஞ்சாட்டி வருகிறது.

அமெரிக்கா சில வாரங்களுக்குள் ஒப்பந்தத்தின் அனைத்து விதிகளையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என ஈரான் காலக்கெடு ஒன்றை நிர்ணயிக்க உள்ளதாகவும், இது அமெரிக்காவுடனான அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளுக்கான முன்நிபந்தனையாக இருக்கும் எனவும் அந்த ஈரானிய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஈரான் இடையிலான வார்த்தைப் போர் கடந்த வாரத்தில் தீவிரமடைந்துள்ளது.
ஈரானிடம் எந்தவொரு வகையிலும் அணு ஆயுதம் இருக்கக் கூடாது என்பதே அமெரிக்காவின் பிரதான இலக்கு என ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை தொடர்பிலும் ட்ரம்ப் கடுமையான கருத்துகளை வெளியிட்டுள்ள நிலையில், இரு தரப்புக்கும் இடையிலான பதற்றம் மேலும் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.