கனடாவில் ஓன்டாரியோ ஏரி நீரில் அடித்துச் செல்லப்பட்ட பெண் பலி
கனடாவின் மிசிசாகா நகரில் உள்ள ஓன்டாரியோ ஏரியில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சனிக்கிழமை இரவு சுமார் 10:30 மணியளவில் மிசிசாகா வீதிக்கு மேற்கே உள்ள 'ஜாக் டார்லிங் மெமோரியல் பார்க்' பூங்காவில் பெண் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக அவசர உதவி மையத்திற்குத் தகவல் கிடைத்தது.
22 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இந்தப் பூங்காவில் சுற்றுலாப் பகுதிகள், விளையாட்டுக் களங்கள், நடைபாதைகள் மற்றும் கண்காணிப்பாளர்கள் இல்லாத கடற்கரைப்பகுதி போன்றவை அமைந்துள்ளன.

தகவல் அறிந்தவுடன் மிசிசாகா தீயணைப்புப் படையினர் மற்றும் பீல் பிராந்தியக் காவல்துறையினர் இணைந்து தீவிரத் தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சுமார் 45 நிமிடத் தேடுதலுக்குப் பிறகு, இரவு 11:15 மணியளவில் தீயணைப்பு வீரர்களால் அப்பெண் நீரிலிருந்து மீட்கப்பட்டார்.
ஆபத்தான நிலையில் இருந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
உயிரிழந்த பெண்ணின் அடையாளத்தைக் கண்டறியும் மற்றும் அவரது உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படும் வரை அப்பெண் குறித்த கூடுதல் விவரங்களை வெளியிட முடியாது என்று காவல்துறையின் ஊடகப் பிரிவு அதிகாரி தெரிவித்துள்ளார்.