தேடப்படும் பட்டியலில் அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்தில் சந்தேக நபர் கைது
கனடாவின் மிகவும் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2021 ஆம் ஆண்டு கனடாவின் போல்டன் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுக் கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த 28 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
வியாழக்கிழமை இரவு ஒன்ராறியோ மாகாண பொலிஸார் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபில்மன் ஃபெஷாகிர்கிஸ் என்ற குறித்த சந்தேகநபர் வின்னிபெக் நகரில் வைத்து மாலை 4:10 மணியளவில் ரோயல் கனடியன் மவுண்டட் பொலிஸார் மற்றும் வின்னிபெக் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் ஒன்ராறியோவிற்கு அழைத்து வரப்பட்டதும், முதல் தரக் கொலை, கொலை முயற்சி மற்றும் கொலைச் சதி ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்படும் என ஒன்ராறியோ மாகாண பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னதாக காலை வெளியிடப்பட்ட கனடாவின் மிகவும் தேடப்படும் முதல் 25 குற்றவாளிகள் பட்டியலில் இவர் 14-ஆவது இடத்தில் பெயரிடப்பட்டிருந்தார்.
ஒன்ராறியோவின் லண்டன் நகரைச் சேர்ந்த 28 வயதான இவர், 2021 ஜனவரி 18 அன்று போல்டன் நகரின் ஹார்வெஸ்ட் மூன் டிரைவ் பகுதியிலுள்ள வீடொன்றில் இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தையடுத்து தலைமறைவாகியிருந்தார்.
இச்சம்பவத்தில் 65 வயதான ஜியோவானி கோஸ்டா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மைக்கேல் கோஸ்டா என்பவர் காயங்களுடன் உயிர் தப்பினார்.
மேலும், 2020 நவம்பர் மாதம் வோன் நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மைக்கேல் கோஸ்டா காயமடைந்த சம்பவத்தின் பின்னணியிலும் ஃபெஷாகிர்கிஸ் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் வழங்கிய தகவல்கள் விசாரணைகளை முன்னெடுப்பதற்கும், தேடப்பட்டு வந்த நபரைக் கண்டறிந்து கைது செய்வதற்கும் பெரும் உதவியாக அமைந்தன என ஒன்ராறியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.