ரோஹிங்கியா இனப்படுகொலை வழக்கில் மியான்மர் குற்றவாளி ; சர்வதேச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு
மியான்மரின் ராக்கைன் மாநிலத்தில் 2017ஆம் ஆண்டு ரோஹிங்கியா முஸ்லிம் மக்களுக்கு எதிராக அந்நாட்டு இராணுவம் முன்னெடுத்த நடவடிக்கைகள் இனப்படுகொலையாக அமைந்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நெதர்லாந்தின் தி ஹேக்கில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றம் நேற்று (19) வழங்கிய இந்தத் தீர்ப்பு, சர்வதேச நீதித்துறை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஒரு நாடு இனப்படுகொலை செய்துள்ளதாக சர்வதேச நீதிமன்றம் தீர்மானித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
2017ஆம் ஆண்டு மியான்மரின் ராக்கைன் மாநிலத்தில் இராணுவம் முன்னெடுத்த நடவடிக்கைகளின்போது ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா மக்கள் கொல்லப்பட்டதுடன், பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர்.

குழந்தைகள் மீதும் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டதுடன், பல கிராமங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
இந்த வன்முறைகளையடுத்து சுமார் 7 இலட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமான ரோஹிங்கியா மக்கள் அண்டை நாடான வங்கதேசத்துக்கு அகதிகளாகச் சென்றனர்.
இந்தச் சம்பவங்கள் தொடர்பில் மியான்மருக்கு எதிராக காம்பியா 2019ஆம் ஆண்டு சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தது.
1948ஆம் ஆண்டு இனப்படுகொலைத் தடுப்பு ஒப்பந்தத்தை மியான்மர் மீறியுள்ளதாக அந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டது.
15 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு 9க்கு 6 என்ற வாக்கு வித்தியாசத்தில் மியான்மர் இனப்படுகொலை செய்துள்ளதாகத் தீர்மானித்தது.
சுமார் 10,000 ரோஹிங்கியா மக்கள் கொல்லப்பட்டமை, பரவலான பாலியல் வன்முறைகள் மற்றும் குழந்தைகள் மீதான தீவிர தாக்குதல்கள் உள்ளிட்டவற்றுக்கான ஆதாரங்கள் இருப்பதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
மேலும், இனப்படுகொலையைத் தடுப்பதிலும், குற்றவாளிகளைத் தண்டிப்பதிலும் மியான்மர் தனது சர்வதேசக் கடமைகளை மீறியுள்ளதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது.
இதற்கமைய, குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களை விசாரித்து, தேவையான சந்தர்ப்பங்களில் வழக்குத் தொடர்ந்து தண்டிக்கவும், இத்தகைய சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மியான்மருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன், இடம்பெயர்ந்த ரோஹிங்கியா மக்கள் பாதுகாப்பாகவும், தன்னார்வத்துடனும், கண்ணியத்துடனும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்யவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இழப்பீட்டுத் தொகை மற்றும் அதனை வழங்கும் நடைமுறைகள் தொடர்பான தீர்மானம் வழக்கின் அடுத்த கட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது.