104 வயதான 'கஸ்' ஆமைக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றி!
கனடாவின் ஹாலிஃபாக்ட்ஸ் நகரில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் வசித்து வரும் 104 வயதுடைய 'கஸ்' என்ற கோஃபர் வகை ஆமைக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சைக்குப் பின்னர், கஸ் தற்போது நலமுடன் ஓய்வெடுத்து வருவதாக அருங்காட்சியகத் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த ஆமையின் சிறுநீர்ப்பையில் திசுக்களை அழுத்தியவாறு இருந்த கல் ஒன்றை அகற்றுவதற்காகவே இந்த அறுவை சிகிச்சை திட்டமிடப்பட்டு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

அருங்காட்சியகம் வெளியிட்ட தகவலின்படி, கஸ் சில நாட்களுக்கு நெருக்கமான மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டு, பின்னர் இந்த வார இறுதியில் அருங்காட்சியகத்திற்குத் திரும்பவுள்ளது.
"கஸ் அடுத்த 8 முதல் 10 வாரங்களுக்குப் பொதுமக்களின் பார்வைக்குப் பதிலாகப் பின்புறப் பகுதியில் பாதுகாப்பாக ஓய்வெடுப்பான்.
எனினும், அவனது உடல்நலம் குறித்த தகவல்களை நாங்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பகிர்வோம்" என்று அருங்காட்சியக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், "எங்கள் அன்பான கஸுக்கு சிறந்த முறையில் சிகிச்சையளித்த கால்நடை மருத்துவக் குழுவினருக்கும், அவனுக்காக ஆதரவும் நல்வாழ்த்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்" எனத் தெரிவித்துள்ளனர்.
உலகிலேயே மிகவும் வயதான கோஃபர் ஆமையாகக் கருதப்படும் கஸ், கடந்த 1942-ஆம் ஆண்டு முதல் ஹாலிஃபாக்ட்ஸ் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் ஒரு முக்கிய அங்கமாக வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.